சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்க்குட்ப்பட்ட பகுதியில் டெங்கு அபாயம்!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் முன் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு சுகாதார வைத்திய அதிகாரிடொக்டர் அர்ஸத் காரியப்பர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பொலிவேரியன் வீட்டுத் திட்ட கிராமம் மற்றும் கடற்கரையோரப் பிரதேசம் என்பவற்றில் அதிகளவிலான நுளம்புப் பெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இடைவிட்ட மழை மற்றும் வெப்பமான காலநிலை டெங்கு நுளம்பு பெருகுவதற்கு சாதகமான சூழலை தோற்றுவிக்கக்கூடும் என்ற காரணத்தினால் பிரதேச மக்கள் தங்களது வீடு மற்றும் சுற்றுப்புற சூழல் , நீர் தேங்கி நிற்கும் பொருட்கள் , நீர் தேங்கும் இடங்கள் , கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தோணி , படகு போன்ற இடங்கள் குறித்து அவதானத்துடன் தொழிற்படுமாறும் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

சாய்ந்தமருது கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை வளாகத்திலும்,சுற்று சூழலிலும் வாரத்திற்கு ஒரு முறை பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களின் பங்களிப்புடன் சிரமதான பணிகளை முன்னெடுக்குமாறு பாடசாலை அதிபர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதே வேளை மக்கள் வசிக்கும் குடியிருப்பு பிரதேசங்களில் உள்ள வடிகான்களில் நீண்ட காலத்திற்கு கழிவுநீர் தேங்கியுள்ளதாகவும் இது குறித்து கல்முனை மாநகரசபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.