(பைஷல் இஸ்மாயில்)
நடக்கப்போகும் பாராளுமன்ற தேர்தலில் ரணில், சஜித் இருவரும் ஒற்றுமைப்பட்டு பயணித்தால் மட்டுமை 113+ பாராளுமன்ற உறுப்பினர்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையே நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளது.
ரணில், சஜித் இருவரையும் ஒன்றுபடுத்துவதில் சில தலைமைகள், தமிழ்த் தலைமைகள் மற்றும் பேரின கட்சியைச் சார்ந்தவர்கள் கடுமையாக உழைத்தபோது கொழும்பிலுள்ள சில அரசியல்வாதிகள் சிலர் திட்டமிட்டு தடுத்துள்ளதாகவும் அறிய முடிகிறது. அந்த நேரம் சஜித், ரணில் இருவரும் இணைய மாட்டோம் என்றும் விடாப்பிடியாக இருந்திருக்கிறார்கள்.
ரணிலின் வயது அவரின் அரசியல் அனுபவம் போன்ற பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இம்முறை ஜனாதிபதிக்கான சந்தர்ப்பத்தை சஜித் விட்டுக் கொடுத்திருக்கலாம். அதற்குப்பிறகு சஜித் பிரதமராக இலகுவில் வந்திருக்கலாம். கால ஓட்டத்தில் ரணிலுக்கு பின்னரான காலத்தில் அசைக்க முடியாத ஜனாதிபதியாக சஜித் வலம் வந்திருப்பார் என்பதாகவே அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றது.
இது இவ்வாறிருக்க, நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 50 சதவீததத்துக்கு மேற்பட்ட வாக்குகளை யாருமே பெற்றுக்கொள்ளவில்லை. இது இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற வாக்குப்பதிவுகளாகும்.
அதனால், பாராளுமன்றத்தில் தனித்து 113+ பெற்று ஆட்சியமைக்கும் அதிகார என்பது பாரிய சிக்கல்களை ஏற்படுத்தலாம். இச்சவாலை புதிய ஜனாதிபதி அனுரகுமார எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
இதனை கருத்திற்கொண்டு ஜனாதிபதி அனுரகுமார, அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும். இதுதான் ஜனநாயத்திற்கும் நல்லதாகும். இல்லையென்றால் ஆட்சியமைப்பதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.
இந்நிலைமையில், ரணில் சஜித் இருவரையும் விட்டுக்கொடுப்புடன் ஒன்றுபடுத்தினால் சிறுபான்மைச் சமூகமும் மலையக மற்றும் ஏனைய சிவில் சமூகமும் விரும்புகின்ற வகையில் பாராளுமன்ற பிரதிநிதிகளை பெற்றுக் கொள்ளலாம். இல்லை என்றால் அனைவருக்கும் தோல்விதான். குறிப்பாக, இவ்விடயத்தில் சிறுபான்மை தலைமைகள் இந்த விடயத்தை கவனத்திற்கொள்ள வேண்டும்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் மிக முக்கிய செய்தி ஒன்றையும் எடுத்துச் சொல்லியுள்ளது. அதாவது, ரணில் தரப்புடன் இருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் நிராகரித்துள்ள அதேவேளை, கட்சி அரசியலையும் மக்கள் நிராகரித்துள்ளார்கள் என்ற பலமான செய்தியையும் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளது.
ரணிலா அல்லது சஜித்தா என்ற போட்டியை புறந்தள்ளிவிட்டு அவர்கள் இருவர்களுக்குள் இருக்கின்ற சிறுபான்மை மற்றும் ஏனைய தலைமைகள் இணைந்து அவர்கள் இருவருக்குள் ஒரு இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி எதிர்கால அரசியலை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமும், தேவையாகும் உள்ளது.