புதிய ஜனாதிபதி அவர்களும் இந்த நாட்டு மக்களின் விடுதலைக்காகப் போராடியவர் நாங்களும் எமது மக்களின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள். மக்களின் விடுதலையை நன்குணர்ந்தவர் என்ற ரீதியில் வடக்கு கிழக்கிலே தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய ஒரு அரசியற் தீர்வை முன்வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டக்களப்பிலி இட்ம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தொழிவிக்கையில்,
இலங்கையின் 09வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. இலங்கையின் 09வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இந்த ஜனாதிபத் தேர்தலிலே ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை தமிழ்த் தேசியக் கட்சிகளும், வடக்கு கிழக்கினைப் பிரதிநிதித்தவப்படுத்தும் சிவில் அமைப்புகளும் இணைந்து ஒரு பொதுக்கட்டமைப்பினை உருவாக்கி அதனூடாக நிறுத்தியிருந்தோம். இதில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு இரண்டு இலட்சத்து இருபதாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இது தமிழ் மக்களது கோரிக்கைக்கும், தமிழ் மக்களின் ஒற்றுமைக்கும் கிடைத்த பலனாகவே நாங்கள் கருதுகின்றோம்.
2001லே முரண்பட்டு நின்ற ஆயுதக்குழுக்கள் அரசியற் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கு அரசியற் குரலாக ஒரே சக்தி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 2009ன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பாரிய சிதைவு உருவாகியிருக்கின்றது. அதன் பின்னர் மீண்டும் ஒருமுறை தமிழ் சக்திகள் தமிழ் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக தமிழ் மக்களின் கோரிக்கையை அபிலாசைகளை ஒரே குரலாகக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் தேர்தலில் நாங்கள் இறங்கியிருந்தோம். அதில் வெற்றியும் கண்டுள்ளோம்.
எனவே எதிர்வரும் காலங்களில் நாங்கள் குறிப்பாகக் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தொடர்ந்தும் இவ்வாறு ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தேவையில் இருக்கின்றோம். இந்தக் கூட்டுக்கு எதிராக சிங்களப் பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு ஒத்துழைத்த தமிழ் பிரதிநிதிகளும் இருக்கின்றார்கள். அவர்கள் எதிர்காலத்திலே தமிழ் மக்களது நிலைமையைக் கருதி தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். தேர்தலின் பின்னர் கூட அவர்களின் கருத்துக்கள் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு எதிராகவும், தமிழ்த் தேசியத்திற்கு எதிராகவுமே இருக்கின்றது. அந்த வகையில் நாங்கள் தமிழர்களது உரிமைகளை இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இணைந்த வடக்கு கிழக்கிலே தமிழர்கள் சுயாட்சியுடன், சுயநிர்ணய உரிமையைப் பெற்று வாழ்வதாற்காக ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் இந்த நாட்டு மக்களின் விடுதலைக்காக, ஊழல்வாதிகளிடமிருந்தும், குடும்ப ஆட்சியில் இருந்தும் இந்த நாடு விடுபட வேண்டும் என்று நீண்டகாலமாகப் போராடிய ஒரு போராளி. அதேபோன்றே தமிழர்களாகிய நாமும் சுயநிர்ணய உரிமையுடன் இந்த நாட்டிலே வாழ வேண்டும் என்று ஆயுத ரீதியாகவும், தற்போது அரசியல் ரீதியாகவும் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டு வருகின்றோம். மக்களின் விடுதலையை நன்குணர்ந்தவர், தமிழ் மக்களின் கடந்த காலப் போராட்டங்களில் எதிரான முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்தவர். இன்று இந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்திருக்கின்றார்.
இந்த நாட்டில முன்பு ஜனாதிபதியாக வந்தவர்கள் கூட தாங்கள் ஒரு நிலைப்பாட்டில் இருந்து விட்டு ஜனாபதியாக வந்தவுடன் ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுத்த வரலாறுகள் இருக்கின்றன. குறிப்பாக ரணசிங்க பிரேமதாச அவர்கள் 1983ம் ஆண்டு இன அழிப்பிலே முக்கியமானவராகத் திகழ்ந்தவர். அவர்கூட 1988, 1989 காலகட்டங்களிலே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு முதல் முதலாக ஸ்ரீ என்ற எழுத்தை இல்லாமல் செய்தார்.
அதேபோன்று தற்போதைய ஜனாதிபதியிடம் நாங்கள் வினயமாகக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இந்தத் தேர்தலில் தமிழ் மக்களது நிலைப்பாட்டை முன்நிறுத்தி ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தி கனிசமான வாக்குகளைப் பெற்றிருக்கின்றோம். இந்த ஒரு நிலைமை எதிர்காலத்திலே மீண்டும் வராமல் இருக்க வேண்டுமாக இருந்தால் புதிய ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டிலே அனைத்து மக்களும் சமமானவர்கள் என்பதை உணர்ந்து எமது இனப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வைக் கொடுக்க வேண்டும் என்ற விடயத்தை அவரது காலத்தினுள் செய்வாராக இருந்தால் அது வரவேற்கத்தக்க விடயமாகக் கருதப்படும்.
அதேபோன்று வடக்கு கிழக்கிலே தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய ஒரு அரசியற் தீர்வையும் அவர் கொண்டு வருவாறாக இருந்தால் கடந்த கால வடுக்களை மறந்து தமிழ் மக்கள் இனப் பிரச்சனைத் தீர்வுக்காக அவருடன் கைகோர்ப்பார்கள். ஏனெனில் ஜனாதிபதி அவர்களும் இந்த நாட்டு மக்களின் விடுதலைக்காகப் போராடியவர் நாங்களும் எமது மக்களின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள். அந்த விதத்தில் சிந்தித்து அவர் செயலாற்ற வேண்டும் என்பது எங்களது கோரிக்கையுளும் அவாவுமாகும் என்று தெரிவித்தார்.