திருகோணமலையில் தேர்தல் பாதுகாப்புக்காக 10000 பொலிசார் கடமையில்

திருகோணமலை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் பணிக்காக 10000 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நேற்று (18) மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தேர்தலுக்கான அனைத்து ஏற்பபாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிசார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனையதரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் மூதூர் தொகுதியில் இருந்து 123,363 வாக்காளர்களும்,
திருகோணமலை தேர்தல் தொகுதியில் இருந்து 105,005 வாக்காளர்களும், சேருவில தொகுதியில் இருந்து 87,557 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், திருகோணமலை மாவட்டத்தில் 318 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 34 வாக்கெண்ணும் நிலையங்களும், இதில் அஞ்சல் வாக்கெண்ணும் பணிக்காக 10 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதோடு, வாக்கெண்ணும் மத்திய நிலையமாக திருகோணமலை விபுலானந்தா கல்லூரி செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வாக்கெண்ணும் பணிகளுக்காக 1632 உத்தியோகத்தர்களும், வாக்களிப்பு நிலையங்களின் கடமைகளுக்காக 1908 உத்தியோகத்தர்களும் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.