இந்தியாவில் காந்தி பெற்றுத் தந்த சுதந்திரமும்…. ஈழத்தில் அகிம்சையின் உச்சமான திலீபனும்…

(இன்று 15/9/1987இல் தமிழரின் உரிமைக்காக தன்னை மெழுகாய் உருகத் தொடங்கிய திலீபனின் உண்ணா விரதம் ஆரம்பமாகிய நாள். மகாத்மா காந்தி உருவாக்கிய அகிம்சை வழி போராட்டம்,
திலீபனின் தியாகத்தால் உச்சம் தொட்டதை உலகம் உணர முடிந்தது)

அகிம்சை ஒரு நெடிய போராட்டம். போராடிக் கொண்டே இருக்கலாம். முடிவு போராட்டத்தின் கையில் இல்லை. எதிராளியின் வலிமையை பொறுத்தே உள்ளது.

காந்தியால் இந்திய நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று கடந்த வருடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி சொல்லி இருப்பதை பலரும் விமர்சித்து உள்ளனர்.

இவ்வேளையில் அகிம்சையின் உச்சம் தொட்ட திலீபனின் தியாகத்தையும் உணர வேண்டும். மகாத்மா காந்தி குறித்து ஆளுநர் சொல்லியிருப்பது வன்மம் கலந்த நோக்கமே என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், முதல்வர் இதனை கடுமையாக சாடியுள்ளார்.

கடந்த வருடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி பங்கேற்று பேசினார். அப்போது, மகாத்மா காந்தி குறித்து ஆளுநர் பேசிய கருத்துக்கள் விமர்சனத்திற்குள்ளானது.

எனினும் காந்தியின் அகிம்சை அவர் பற்றியும், காந்தி பெற்றுத் தந்த இந்திய சுதந்திரம் பற்றியும் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. ஏன், மகாத்மா காந்தியை விட திலீபனின் தியாகத்தால் சிறந்தவன் என இந்திய அரசியல் தலைவர்களே கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆயினும் காந்தி தேசத்தின் தமிழின விரோத நிலைப்பாட்டின் அழியா
சாட்சியாக விளங்குவதே தியாக தீபம் திலீபனின் உயிர்க் கொடையாகும். திலீபனின் போராட்டம் மற்றொரு முறை அகிம்சை என்ற தத்துவத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே உள்ளது.

காந்தியை விட திலீபன் மேலானவன் – வை.கோ:

திலீபன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு இருந்த போது, அன்றைய இந்தியத் தூதுவர் தீக்சித் இடம் திலிபனின் உண்ணாவிரதம் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்குப் பதிலளித்த தீக்சித், திலீபன் என்ன மகாத்மா காந்தியா? என்று இறுமாப்புடன் தெரிவித்திருந்தார்.

இந்தியத் தூதுவர் தீக்சித்தின் இந்தக் கூற்று பற்றி பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த வை.கோபால்சாமி அவர்கள், திலீபன் மகாத்மா காந்தியைவிட சிறந்தவன் என்று அடித்துக் கூறியிருந்தார்.

திரு வைக்கோ, தனது இந்த வாதத்திற்காக மகாத்மா காந்தியின் சுயசரிதையான சத்திய சோதனையில் இருந்து ஒரு சம்பவத்தையும் எடுத்துக் காண்பித்திருந்தார். மகாத்மா காந்தியின் இளமைப் பருவத்தின் போது அவரது தந்தை காலமாகிவிட்டார்.
தந்தையின் பூதவுடல் அஞ்சலிக்காக வீட்டின் கூடத்தில் கிடத்தி இருக்கையில், தனது இளமையின் பாலியல் உணர்ச்சிகளை காந்தியால் கட்டுப்படுத்தமுடியாமல் மறைவில் சென்று அதனை தீர்த்துக்கொண்டதாக சத்திய சோதனையில் காந்தி தெரிவித்திருந்தார்.

இளவயதின் உணர்ச்சிகளை மகாத்மாவினாலேயே அடக்கமுடியாது இருந்துள்ளது. ஒரு சோகமான நேரத்தில்கூட மகாத்மாவினால் தனது பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்தமுடியாமல் அதற்கு வடிகால் தேடிச் சென்றுள்ளார்.

ஆனால் திலீபனோ தனது இள வயதில், அந்த வயதிற்கான அனைத்து உணர்ச்சிகளையும் உதறித் தள்ளிவிட்டு, தனது கொள்கைக்காக தன்னுயிரை தியாகம் செய்ய முன்வந்திருந்தான். இதனாலேயே மகாத்மா காந்தியை விட திலீபன் மேலானவன் என வை.கோபால்சாமி தெரிவித்திருந்தார்.

ஒப்பிலா அறவழிப் போராளி திலீபன்:

நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி விடைபெறுகிறேன் என தன்னுடலுக்கு துரோகமும் தன்னினத்திற்கு தன்னையும் தந்த ஒப்பிலா அறவழிப் போராளி திலீபனின் இறுதி வார்த்தைகளே இவையாகும்.

தமிழீழம் என்பது சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்த ஒரு சமதர்ம சோசலிச தமிழீழமாகத் தான் மலரும் என்ற விடுதலைக் கனலை விழியிலேந்திய பார்த்திபன் இராசையா என்னும் இயற்பெயர்கொண்ட திலீபன், நவம்பர் 29, 1963-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள வலிகாமம் பிரதேசத்தின் ஊரெழு கிராமத்தில் ஆசிரியருக்கு மகனாகப் பிறந்தவர். சிறு வயதிலேயே தாயினை இழந்தார். தந்தையின் பாசம், இரு அண்ணன்களின் அரவணைப்பு என மிகவும் செல்லமாக வளர்ந்த திலீபன் படிப்பிலும், அறிவுக் கூர்மையிலும் மிகுந்த திறனுடையவராக இருந்தார்.

இலங்கை அரசு தமிழ் மாணவர்களின் கல்வியை நாசப்படுத்த கொண்டு வந்த தரப்படுத்துதல் அளவையும் தாண்டி அதிக மதிப்பெண் எடுத்து யாழ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தேர்வாகி படிக்கச் சென்றார். மருத்துவம் படித்து மக்களுக்கு சேவை செய்ய நினைத்த மகத்தான மனிதன் தன்னின மக்கள் சிலரிடம் நோயாக மாறியிருந்த இனவுணர்வுக் குறைபாட்டை போக்க தனது உயிரையே மருந்தாக அளித்த துயரமும் நடந்தேறியது.

காந்தியின் அகிம்சை வழியில் தன் விடுதலையை பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தை கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான்.

உண்மையில் அகிம்சை மூலமாக இந்தியா விடுதலைப் பெற்றது என்பதே இந்திய விடுதலையை ஒட்டி எழுப்பபட்ட மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் தானே தவிர அகிம்சை மட்டுமே இந்தியாவின் விடுதலைக்கு காரணமாக அமைந்து விட வில்லை. இந்திய விடுதலை அகிம்சையினால் நிகழ்ந்தது என்றால் அதனைவிட ஆயுதமேந்தி போராடிய இந்திய வீரர்களை மறந்துவிட முடியாது.

தமிழ் நாடு ஆளுநரின் கருத்துக்கு கண்டனங்கள் எழுந்தாலும், காந்தியின் அகிம்சையும் திலீபனின் உயிர்க்கொடையையும் ஒரே தட்டில் ஒப்பிட முடியாது. திலீபனுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. திலீபன் காந்தீய வழியில் தன் போராட்டத்தை முயன்றார். ஆனால் காந்தி போல உயிர் வாழ முயலவில்லை. திலீபன் தன் உயிரை ஒரு பொருட்டாக கருதவில்லை. தியாகத்தின் உச்சத்திற்கே திலீபன் சென்றார்.