அன்னை ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலய புனருத்தான திருத்தாபன எண்கழிம முப்பத்தாறு தத்துவத்தூண்கள் தாங்கும் பதினேழு குண்ட பிரம்ம சூத்திர பெரும்யாக பெரும் கும்பாபிசேக குடமுழுக்கு பெருவிழா

அக்கரைப்பற்று சின்னக்குளம் அன்னை ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலய புனருத்தான திருத்தாபன எண்கழிம முப்பத்தாறு தத்துவத்தூண்கள் தாங்கும் பதினேழு குண்ட பிரம்ம சூத்திர பெரும்யாக பெரும் கும்பாபிசேக குடமுழுக்கு பெருவிழா இம்மாதம் 15ஆம் திகதி சுபநேரத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த 08ஆம் திகதி கர்மாரம்ப கிரியைகளோடு ஆரம்பமான கும்பாபிசேகப் பெருவிழா 09ஆம் 10ஆம் 11ஆம் 12ஆம் திகதிகளில் இடம்பெறுகின்ற கும்பாபிசே வழிபாட்டு கிரியைகளோடும் 13ஆம் 14ஆம் திகதிகளில் இடம்பெறுகின்ற தைலாப்பியாங்கம் என சொல்லப்படும் பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்துவம் நிகழ்வுகளோடும் 15ஆம் திகதி காலை திருகோண நட்சத்திரமும் கன்னிலக்கினமு; கூடிய 6 மணி முப்பது நிமிடம் தொடக்கம் 7 மணி ஐம்பத்தொன்பது நிமிடம் வரையிலான சுபநேரத்தில் அம்மனுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு இடம்பெற்று தொடர்ந்து 14 நாட்கள் இடம்பெறும் மண்டலாபிசேக பூஜைகளுடனும் நிறைவுறும்.

தலபுராணம்-
நிழலான பூவரச மரநிழலை கண்டு
அன்னையே உன் திருமனது மகிழ்ந்து
அழகான கோயிலை அமைத்திடவே எண்ணி
அன்பான சிவராசா உடலது ஏறி
அருளான அருள்வாக்கு அம்மையும் அருள
மக்களும் மனமார இவ்விடம் வந்து
எழிலான சின்னக்குளம் பதியதனில் – எங்கள்
அம்மை வீரமாகாளிக்கு ஓர் ஆலயம்; கட்டி வைத்தார்கள்.

வரலாற்றுச் சுருக்கம்-
சிவபூமியாம் இலங்காபுரியின் கீழைத்தேசமதில் அருமறைகள் மாட்சிதரும் அக்கரைப்பற்று பெருநகரில் இற்றைக்கு சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் ஆலயம் அமைந்திருக்கும் இந்த அற்புதசக்தி வாய்ந்த இடமோ ஒரு சிறுகுளம். பிள்ளைகளும் பெரியோர்களும் மீன்பிடித்து விளையாடும் சேறு நிரம்பிய சதுப்புநில பிரதேசம். அந்த குளத்தில் மீன் பிடித்து விளையாடிய சிறுவனே சிவராசா எனும் கல்வியினை பூரணமாக கற்காத ஒரு சிறுவன்.
அப்போது நாட்டில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலம். இதன் உச்ச கலவரம் இடம்பெற்ற 1990 இல் அனைவரும் இடம்பெயர்ந்து அகதிகளாக திருக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தஞ்சம் அடைந்த நேரம். இக்காலத்தில் அக்கரைப்பற்று வாழ் அனைத்து மக்களின் ஒரே அம்மன் வழிபாட்டுத்தலமாகவிருந்து பல அற்புதங்கள் புரிந்த சரணபாலபுரம் பகுதியில் குடிகொண்டிருந்த விஸ்வகுலமக்களின் குலதெய்வமான அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம் கலவரத்தினால் உடைக்கப்பட்டது. அங்கு குடிகொண்டிருந்த அம்மனுக்கு பூஜை வழிபாடுகள் சில காலம் இல்லாமல் போனது.

இதன்போது அன்னையவள் சிவராசாவின் கனவில் தோன்றி தனக்கென ஓர் ஆலயத்தை அமைத்து வழிபடுமாறு கூறவே ஒன்றும் அறியா சிவராசா பூவரசமர நிழலில் ஓலைக்குடிசை ஒன்றை தன்நண்பர்களின் உதவியுடன் தனக்கு சொந்தமான வளவில் அமைத்து வழிபட தொடங்கினான். ஓலைக்குடிசையில் ஓய்யாரமாய் அமர்ந்து கொண்ட அன்னை ஸ்ரீ வீரம்மகாளியின் அருள் பெருகியது.

இந்நிலையில் பல எதிர்ப்புக்கள் உருவானது. தனது அண்ணன் தொடக்கம் ஊரவர்கள் வரைக்கும் எதிர்வலைகள் உருவானது. சில ஆலயங்களும் தடைகள் பல இட்டன. ஆனாலும் தடைகளை ஏற்படுத்திய அனைவரும் அன்னையின் அருளால் அவள் பதம் சரணடைந்தனர். படிப்படியாக பக்தர்கள் கூட்டம் பெருகியது. ஓன்றும் அறியா சிவராசாவும் அம்மன் அருளால் மந்திரங்களை உச்சரிக்க தொடங்கினான். நிருவாக கட்டமைப்பும் தானே உருவானது. ஆலயமும் வளர்ச்சி அடைந்தது.

இதற்கிடையே அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயமும் அக்கரைப்பற்று 7ஃ2 பிரிவில் பத்திரகாளியம்மனுக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டு மக்களால் வழிபடப்பட்டது. இரு அம்மன் ஆலயங்களிலும் குடிகொண்ட அன்னையவள் இரு கண்களை போல் மக்களை காத்து நின்றாள்.

இந்நிலையில் வீரம்மாகாளியம்மனின் தீமிதிப்பு வழிபாடுகளை மேற்கொள்ள விநாயகபுரத்தில் இருந்து மாணிக்கன் பூசகர் அழைக்கப்பட்டார். தொடர்ந்து வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மாணிக்கம் பூசகர் இறையடி சேர்ந்தார். அவரது இடத்திற்கு பதிலாக பலரை நியமிக்க அப்போது முடிவு செய்தபோதிலும் அப்போதைய நிருவாகத்தால் அம்மனுக்கு பல வருடகாலம் தொண்டாற்றிய சிவத்திரு யோகானந்தம் (ரவி) அம்மன் அருளால் பூசகராக இணைந்து கொண்டார். இதேநேரம் அம்மனவள் குடிகொண்ட அம்மனுக்கு பணிவிடை செய்து அம்மன் கும்பத்தினை சுமத்து ஊர்வலம் சென்று கொண்டிருந்த சிவராசா உடல் நலம் குறையவே அவரது இடத்திற்கு அவரது மருமகன் சிவத்திரு ரூபன் அம்மன் அருளால் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இது இவ்வாறிருக்க அவ்வப்போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிருவாகங்களும் அம்மன் ஆலய கட்டட வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது. இதன் அடிப்படையில் அன்னையினுடைய முதலாவது நவகுண்டபட்ஷ மகாகும்பாபிசேகம் 2013இல் நடைபெற்றது.

இவ்வாறான ஆலய வளர்ச்சிப்பாதையில் தவிர்க்க முடியாத சில தடைகளும் 2020 ஆண்டளவில் ஒரு சிலரால் ஏற்படுத்தப்பட்டது. அப்போது நிருவாகத்தை பொறுப்பேற்க அனைவரும் பின்வாங்கினர். ஆனாலும் யாரும் எதிர்பாராத வகையில் தற்போதைய தலைவர் பா.பிரசாத் தலைமையிலான செயலாளர் யோகானந்தம் பொருளாளர் பிரதீபன் ஆகியோரை உள்ளடக்கிய நிருவாகம் அப்போதைய பிரதேச செயலாளர் வி.பபாகரன் முன்னிலையில் பலத்த இழுபறிக்கு மத்தியில் பொறுப்பேற்றது. இருந்தாலும் இரு ஆண்டுகளின் பின்னர் செயலாளராக நிராஜ் பொறுப்பேற்றார். இதன் பின்னராக இடைவிடாத இந்த நிருவாகத்தின் முயற்சியால் இழக்கப்பட்ட அம்மன் சொத்துக்கள் அறவீடு செய்யப்பட்டது. முதல் தடவையாக அம்மன் ஆலயத்திற்கு சொந்தமாக மூன்று ஏக்கர் காணியும் கொள்வனவு செய்யப்பட்டது.

தொடராக ஆலய கும்பாபிசேகம் காணும் நாளும் வரவே ஆலய புனருத்தாபன பணிகள் தொடங்கியது. யாரும் எதிர்பாராத அளவிற்கு அம்மன் அருளால் ஆலயம் புதுப்பொலிவு பெற்றது. புனருத்தான திருத்தாபன எண்கழிம முப்பத்தாறு தத்துவத்தூண்கள் தாங்கும் பதினேழு குண்ட பிரம்ம சூத்திர பெரும்யாக பெரும் கும்பாபிசேக குடமுழுக்கு பெருவிழாவிற்கான திகதியும் குறிக்கப்பட்டது.

கர்மாரம்ப கிரியைகள் 2024.09.08ஆம் திகதி இடம்பெற்றதுடன் 09 10 11 12 ஆம் திகதிகளில் கும்பாபிசேக கிரியைகள் இடம்பெறுவதுடன் 13 14ஆம் திகதிகளில் தைலாப்பியாங்கம் என சொல்லப்படும் எண்ணெய்க்காப்பு சாத்தும் வழிபாடுகளுடனும் 15ஆம் திகதி காலை 6.30 மணி தொடக்கம் 7.50 வரையான சுபநேரக்காலப்பகுதியில் அம்மனுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிசேக குடமுழுக்கு இடம்பெற அம்மன் அருள் கைகூடியுள்ளது.

கும்பாபிசேக கிரியைகள் யாவும் அக்கரைப்பற்று பெரிய பிள்ளையார் ஆலய பிரதமகுரு தர்புருச சிவாச்சாரியார் பிரதிஷ்டா கலாமணி சிவஸ்ரீ சண்முகவசந்தன் குருக்கள் தலைமையில் ஆலய முதல்வர் சிவராசா சிவம் மற்றும் உற்சவகால பிரதமகுரு யோகானந்தம் ரவி சிவம் ஆகியோர்களின் ஒத்துழைப்போடும் இன்னும் பல குருமார்களின் பங்களிப்போடும் ஆலய நிருவாக சபை மற்றும் இளைஞர்கள் பொதுமக்களின் அயராத முயற்சியின் பயனாகவும் இடம்பெறவுள்ளது.