நகர சபை பெண் ஊழியர் எம்.பி. ஒருவரின் அலுவலகத்தில் தாக்கப்பட்டமைக்கு எதிராக போராட்டம்.

மன்னார் நகர சபை எல்லைக்குள் உள்ள வீடுகளில் நிலுவையிலுள்ள ஆதன வரிகள் தொடர்பாக செயல்பட்ட பெண் ஊழியர் ஒருவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகதத்pல் தாக்கப்பட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்ற போதும் உதவி தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோளுக்கு இணங்க இவ் கவனயீர்ப்பு போராட்டம் இடை நடுவில் கைவிடப்பட்டது.

மன்னார் நகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள வீடுகளில் நிலுவையிலுள்ள ஆதன வரிகளை அறவிடுவதில் மன்னார் நகர சபை பெண் ஊழியர்கள் இருவர் கடமையில் கடந்த வியாழக்கிழமை (12) ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வன்னி ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் இயங்கிக் கொண்டு இருக்கும் வீட்டுக்கு இரு பெண் ஊழியர்களும் அங்கு சென்று நிலுவையிலுள்ள ஆதனவரியை சேகரிக்கச் சென்ற சென்றபோது இவ் அலவலகத்துக்கு பொறுப்பு வாய்ந்தவருக்கும் அங்குச் சென்ற பெண் ஊழியருக்கும் இடையே வாய்த் தர்க்கம் ஏற்பட்டதாகவும்

இதனால் ஆத்திரம் கொண்ட ரெலோ அலவலக பொறுப்பாளர் அங்கு சென்ற பெண் ஊழியர் ஒருவரின் கழுத்தைப் பிடித்து தள்ளி விட்டதாகவும் தங்கள் கடமைக்கு குந்தகம் ஏற்படுத்தியதாகவும் மன்னார் பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டைக் கண்டித்து மன்னார் நகர சபை உத்தியோகத்தர்கள் . ஊழியர்கள் , மன்னார் மாதர் ஒன்றியம் மற்றும் பொது மக்களும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மன்னார் நகர சபைக்கு முன்னால் பதாதைகளை ஏந்திவாறு வெள்ளிக் கிழமை (13) காலை நடாத்தினர்.

இவர்கள் ஏந்தியிருந்த பதாதைகளில் ‘பெண்கள் மீது வன்முறை காட்டும் கோழைகள் தண்டிக்கப்பட வேண்டும்’ ‘பண பலமிருந்தால் அரச அலுவலரை அடிப்பது சாதாரண விடயமா?’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை போராட்டக்காரர்கள் தங்கள் கைகளில் எந்தியிருந்தனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு வருகை தந்த மன்னார் உதவி தேர்தல் ஆணையாளர் வீ.சிவராசா போராட்டக்காரர்களை நோக்கி தற்பொழுது தேர்தல் காலமாக இருப்பதால் இவ்வாறான போராட்டங்கள் நடாத்த தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆகவே இதை கைவிட்டு உடன் கலைந்து செல்லுமாறு அவரால் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க இந்த போராட்டம் உடன் இடை நடுவில் கைவிடப்பட்டது.