முஸ்லிம் பெயர் தாங்கி அரசியல் கட்சிகளின் அரசியல் வியாபாரம் 22 ஆம் திகதியுடன் மூட்டை கட்டப்படும்.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களின் இணைப்புச் செயலாளர் ரஜா மற்றும் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கலீலுர் றஹ்மான் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து ஏற்பாடு செய்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் .இறக்காமம் பிரதேசத்தில் இடம்பெற்றது.

இப்பிரச்சாரக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆஸாத் சாலி,கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் ரனூஸ் இஸ்மாயில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய மன்னாரைச் சேர்ந்த உலமாக்கலான முனாஜித், இர்சாத், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், ஊர்ப் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கூடுதலான மக்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் அதிதிகள் பலரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தை மிகவும் ஆணித்தரமாக வலியுநுத்திப் பேசியமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இங்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முசாரப் அவர்கள் உரையாற்றும்போது,

சர்வதேசம் அங்கீகரித்த இனவாதமில்லாத ஆளுமைமிக்க தலைமைத்துவம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களாகும்.அவ்வாறான ஒரு தலைவரை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்வது நாட்டு மக்களின் கடமையாகும்

இந்நாட்டில் அபாயகரமான ஒரு கட்சியாகவும், இயக்கமாகவும் ஜே.வி.பி கட்சி காணப்படுகின்றது. தனது கட்சி சின்னமான மணியை வெளியே கொண்டு வர தைரியம் இல்லாமல் மணி காட்டியாக ஒளிந்து கொண்டிருக்கின்றார்கள். அங்கேதான் அவர்களது தோல்வி தொடங்கிவிட்டது. நாட்டின் பொருளாதார அழிவுக்கும் அந்தக் கட்சிதான் காரணமாகும்.

பல்கலைக்கழகம் தொடக்கம் அரச நிறுவனங்கள் வரை தொழிற்சங்கள் என்ற போர்வையில் அமைப்புகளை ஏற்படுத்தி போராட்டங்களைச் செய்து காலத்தை வீணடித்து பொருளாதாரம் வளர்ச்சியடையாமல் தடுக்கின்றனர்.

ராஜபக்ஸக்கள் திருடர்கள் என்று கத்துகின்றனர். ராஜபக்ஸக்களை 2005ம் ஆண்டு ஆட்சிக்கு கொண்டுவர உழைத்தவர்கள் ஜே.வி்.பி.கட்சியினர்தான். மஹிந்த சிந்தனையை புகழ்ந்து பாராட்டி பேசியவர்கள் இன்று ராஜபக்ஸக்கள் கள்வர்கள் என்று கத்துவது வேடிக்கையாக உள்ளது.

எனவேதான் சர்வதேசம் அறிந்த, இனவாதமில்லாத, இளைஞர்களை முன்னிலைப்படுத்தும் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க நாம் எல்லோரும் தயாராக வேண்டும்.

அரசியல் அதிகாரம் இல்லாமல் எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இறக்காமத்திற்கு எதிர்காலத்தில் நிச்சயமாக அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுப்பேன். கடந்த காலத்தில் நான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் எண்ணத்துடனயே இருந்து கொண்டிருக்கின்றேன்.

இறக்காமத்தின் அபிவிருத்திக்காக எனக்குக் கிடைத்த வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டிலும், விசேட நிதி ஒதுக்கீட்டிலும் சமார் 16 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கிவிட்டுத்தான்.இந்த மேடையில் பேசிக்கொண்டிருக்கின்றேன்.

நமது அரசியல் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத அரசியல் கைக்கூலிகள் முசாரப் வாக்குறுதியை மீறிவிட்டதாக அபாண்டமான பொய்யைச் சொல்லுகின்றனர்.

பொத்துவில் பள்ளிவாசலில் நான் செய்த சத்தியத்தைக் காப்பாற்றவே நான் இருக்கின்றேன். இலங்கையில் உள்ள எந்தப் பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகன பேர்மிட் இன்றுவரை வழங்கப்படவில்லை. அவ்வாறு கிடைக்கும்போது அதனை செய்யவே சித்தமாக உ்ளளேன்.

ஒரு அமைச்சினைக்கூட சரியாக செய்து முடிக்க துப்பில்லாத சஜித் பிரேமதாசவினால் இந்நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. இன்று இனவாத்தின் கூடாரமாக ஐக்கிய மக்கள் சக்தி காணப்படுகின்றது. அந்த இனவாதக் கூடாரத்தில் ஹக்கீமும், ரிசாட்டும் இருப்பதை முஸ்லிம்கள் அங்கீகரிக்க முடியாது.

தமது அரசியல் வியபாரத்திற்காக முஸ்லிம்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றனர். எதிர்வரும் 22ம் திகதியுடன் முஸ்லிம் தலைமைகள் என்று சொல்லும் அரசியல் வியாபாரிகள் கொட்டம் அடங்கிப்போகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.