அலிஸாஹிர் மௌலானா மீதான ஒழுக்காற்று விசாரணைக்காக குழு நியமனம்.!

பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவை ஏன் கட்சி உறுப்புரிமையில் இருந்து விலக்கக்கூடாது என்ற காரணங்களை வினவி விசாரணை செய்வதற்காக கட்சியினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழு முன்னிலையில் நேரடியாக ஆஜராகி தன்னுடைய விளக்கத்தை தருமாறு அலிஸாஹிர் மௌலானாவை, தான் கடிதம் மூலம் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கிய இடைக்கால தடை உத்தரவானது பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா அவர்களுக்கு எதிரான விசாரணை கட்சி யாப்பின் படியும் இயற்கை நியதியின் அடிப்படையிலும் செய்வதற்கு எந்த தடையையும் ஏற்படுத்தாது என்ற விடயம் இவ்வழக்கு கடந்த 11ஆம் திகதி நீதிமன்றத்தில் வந்தபோது தெளிவுபடுத்தப்பட்ட பின்னணியிலேயே இந்த விசாரணை நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அறிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவராகவும் அக்கட்சி மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டு வந்த அலிஸாஹிர் மௌலானா கட்சியின் தீர்மானத்தை மீறி ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதுடன் அமைச்சுப் பதவியையும் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் இடைநிறுத்தப்பட்டதை சவாலுக்குட்படுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இதனை பரிசீலித்த நீதிமன்றம் அமைச்சர் அலிஸாஹிர் மௌலானாவை கட்சியில் இருந்து இடைநிறுத்தியமைக்கு எதிராக முறையே செப்டம்பர்-11 வரையும் செப்டெம்பர்-25 வரையும் இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.