(அஸ்லம் எஸ்.மெளலானா) ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்த “இயலும் சிறிலங்கா” மாபெரும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் ஒன்று அவரது பங்குபற்றுதலுடன் சாய்ந்தமருது பௌஸி மைதானத்தில் நேற்று புதன்கிழமை (11) இரவு நடைபெற்றது.
ஜனாதிபதியின் கல்முனைத் தொகுதிக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் ஏற்பாட்டில், அவரது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர்களான அலி சப்ரி, அலிஸாஹிர் மௌலானா,
திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா, சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், முன்னாள் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
இதன்போது அங்கு திரண்டிருந்த மக்களால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன் பிரமுகர்கள் பலரும் பொன்னாடை போர்த்தி , நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவித்தனர்.
இக்கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான தயா கமகே உட்பட பல்வேறு அரசியல் தரப்புகளின் முக்கியஸ்தர்களும் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களுடன் மைதானம் மற்றும் வீதிகள் நிறைந்ததாக பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.