சஜித் பிரேமதாசஸ அவர்களை வெல்ல வைப்பதன் மூலம் தான் எங்களுடைய அபிலாசைகளை நாம் வென்றெடுக்க முடியும் என முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் சாய்ந்தமருது காரியாலய திறப்பு விழாவும் பொது கூட்டமும் முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் (09) தலைமையில் அவருடைய இல்லத்தில் இடம்பெற்ற போது அங்கு தலைமை வகித்துப் பேசிய அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் பேசி அவர் கூறியதாவது,
கடந்த ஆகஸ்ட் 4 ஆம் திகதி கட்சியின் உயர்பீடம் கூடிய போது, சஜித் பிரேமதாஸவோடு நாங்கள் இருக்கின்றோம். ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ அவர்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றார் என்று தலைமைத்துவம் கூறியது. அப்போது
நாங்கள் அந்தக் கூட்டத்திலே என்ன முடிவினை மேற்கொள்ள இருக்கின்றோம் என்று எல்லோரும் ஒவ்வொருவராக கருத்துக்களை தெரிவித்த போது, ஆக முன்னதாகவும் நாங்கள் அதாவது இந்த இயக்கம் சஜித் பிரேமதாஸவை கட்டாயமாக ஆதரிக்க வேண்டும்.
என்று எடுத்த முடிவின் பிரகாரம், எங்களின் தலைமைத்துவம் இந்த நாட்டிலே உள்ள மூளை முடுக்குகளிலே, ஒவ்வொரு இடத்துக்கும் சென்று சஜித் பிரேமதாஸ அவர்களின் வெற்றிக்காக, அவர் செய்கின்ற தியாகங்களையும் அதனுடைய செயற்பாடுகளையும் பார்த்து நாங்கள் பொறாமைப்படுகின்றோம். காரணம், அவர் தருகின்ற உற்சாகம், ஊக்கம் எல்லோரிடமும் கட்டளையைப் பிறப்பித்து, சஜித் பிரேமதாஸவை வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
அதற்கு இந்த இயக்கத்தில் இருக்கின்ற அத்தனை பேரும் பாடுபட வேண்டும். அப்போதுதான் எங்களது முஸ்லிம் சமூகத்தின் விடுதலையாக இருக்கட்டும் அல்லது எங்களுடைய தேவைப்பாடுகளாக இருக்கட்டும் அத்தனை விடயங்களையும் நாங்கள் பெற்றுக் கொள்வதற்கு எங்களுடைய சஜித் பிரேமதாஸ அவர்களை ஆதரிக்க வேண்டும் என்று ஒவ்வொரு வாரக் கூட்டங்களும், தொலைபேசி அழைப்புகளும் அழுத்தங்களும் எங்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன. அதன் பிரகாரம் தான் நாங்களும் எங்களால் முடியுமான எங்களது செயற்பாடுகளை இந்த இயக்கத்தின் ஊடாக நாங்கள் செய்து வருகின்றோம்.
அன்பின் தாய்மார்களே! என்னுடைய தேர்தலுக்காக நீங்கள் எவ்வளவு பாடுபட்டீர்கள். ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று என்னை வெல்ல வைப்பதற்காக இந்தத் தாய்க்குலங்கள் மிகவும் சிரமப்பட்டு, கல்முனை மாநகரத்தின் முதல்வராக்கினீர்கள். அதேபோன்று, எதிரே வருகின்ற தேர்தலும் மிகவும் முக்கியமான ஒரு தேர்தலாக இருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தினுடைய எதிர்காலம் மற்றும் முஸ்லிம்களுடைய அத்தனை விடயங்களும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசஸவை வெல்ல வைப்பதன் மூலம் தான் எங்களுடைய அபிலாசைகளை வென்றெடுக்க முடியும். அது எம்மால் முடியும் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.
ஆகவே, அன்புக்குரிய தாய்மார்களே! சகோதர சகோதரிகளே! இந்த இயக்கத்தின் போராளிகளே! நீங்கள் அத்தனை பேரும் சஜித் பிரேமதாஸ அவர்களை ஆட்சி பீடத்துக்கு அமர்த்துவதன் மூலமாகத்தான் எங்களுடைய விடியலையும், இருப்பையும் முஸ்லிம் சமூகம் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதையும் நீங்களும் மறந்து விடாதீர்கள்.
கடந்த கால கொடுங்கோல் ஆட்சியாளர்கள் இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கு அவர்கள் செய்த துரோகங்களை நீங்கள் மறந்து விடக்கூடாது. கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவர்களைக் கூட விட்டு வைக்காமல் எரித்தார்கள். எங்களுடைய தாய்மார்கள் அழுதார்கள். இறைவனிடம் துஆக் கேட்டார்கள். இந்த அயோக்கியர்களை இறைவா பதவியில் இருந்து துரத்தி விடு என்று சொன்னார்கள். இரண்டு வருடங்கள் கழியவில்லை. அந்தப் பதவியில் இருந்து எங்களுடைய தாய்மார்களின் துஆக்களினால் ஆட்சி பீடங்களிலிருந்து ஏன் நாட்டை விட்டே துரத்தியடிக்கப்பட்டார்கள். அப்படிப்பட்ட நாங்கள் எதையும் மறக்கவில்லை. கொரோனா மாத்திரமல்ல, இந்த நாட்டினுடைய பொருளாதாரச் சீரழிவுகள் போன்றவைகளை நாங்கள் மறக்கவும் இல்லை. மன்னிக்கவும் மாட்டோம்.
ஆகவே போராளிகளே, இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலிலே சுபஹுத் தொழுகையைத் தொழுதுவிட்டு, இறைவனிடம் துஆவில் ஈடுபட்டு, அன்றைய தினம் நீங்கள் எல்லோரும் காலையிலேயே வாக்குச்சாவடிக்குச் சென்று நாங்கள் ஆதரிக்கின்ற எங்களுடைய வேட்பாளராகிய இந்த நாட்டினுடைய ஜனாதிபதியாக இருந்த மறைந்த ரணசிங்கப் பிரேமதாஸ அவர்களுடைய புதல்வர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அவருடைய சின்னமான தொலைபேசி சின்னத்திற்கு நீங்கள் உங்கள் பொன்னான வாக்கினை அனைவரும் இட்டுச் செல்ல வேண்டும்.
நீங்கள் சஜித் பிரேமதாஸவுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை படித்துப் பாருங்கள். காணி விடயங்களாக இருக்கலாம் அல்லது இளைஞர், யுவதிகளுடைய தொழில் வாய்ப்புகளாக இருக்கலாம் எல்லாவற்றையும் மிகத் தெளிவாக அந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலே சொல்லி இருக்கின்றார்.
ஆகவே, நண்பர்களே! உங்களிடம் நான் மிகவும் பணிவாக கேட்டுக் கொள்வது, எதிரே நடக்கவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் கட்டாயம் சஜித் பிரேமதாஸவினை வெற்றி பெறச் செய்து, எமது சமூகத்தின் பிடியினை மாற்றி அமைக்க இன்ஷா அல்லாஹ் நாம் எல்லோரும் புறப்படுவோம். சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிப்போம் என்றும் தெரிவித்தார்.