மட்டக்களப்பில் உலகளவிய தற்கொலை விழிப்புணர்வு!

சர்வதேச தற்கொலை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் அரச மற்றும் அரச சார்பற்ற பிரதி நிதிகளுடன் வருங்காலத்தில் தற்கொலைகளை தடுப்பதற்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர். முரளிஸ்வரன் தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் (10) திகதி இடம் பெற்றது.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவின் அடிப்படையில் இளம் பராயத்தினரின் மத்தியில் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்கான விழிப்புணர்வு செயல்திட்டம் மட்டக்களப்பில் இடம் பெற்றது.

கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 170 தற்கொலை மரணங்களும் இவ்வருட கால் ஆண்டில் 70 தற்கொலை மரணங்களும் இடம் பெற்றுள்ளது.

இளம் பராயத்தினரின் தற்கொலை மரணத்தை தடுப்பதற்கான முற்தடுப்பு கலந்துரையாடல் துறைசார் நிபுணர்களுடன் இடம் பெற்றதுடன் எதிர் காலத்தில் தற்கொலை முற்தடுப்பு நிகழ்வுகளை மேற்கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பாடசாலையில் இடை விலகல், குடும்ப பிரச்சினைகள், பொருளாதாரப் போராட்டங்கள், போதைப்பொருள் பாவனை, துஷ்பிரயோகம், மன அழுத்தம் இது போன்ற பல காரணிகள் தற்கொலைக்கான காரணிகளா அமைவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

பாடசாலை மட்டத்தில் இருந்து விழிப்புணர்வு தெளிவூட்டல் மூலம் மாணவர்களை அளுமை மிக்கவர்களாக மாற்ற முடியும் என இதன் போது கருத்துரை வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.