தேசிய மட்ட சாதனையாளர்களுக்கான வரவேற்பு நிகழ்வு!

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாசார போட்டிகளில் திறமைகளை வெளிக்காட்டி தேசிய மட்டத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்த அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்களை பாராட்டி வரவேற்கும் நிகழ்வு இன்று (09) பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
அதிபர் ஏ.எச். பௌஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது தேசிய மட்ட சாதனை மாணவர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.செய்னுதீன், பிரதி அதிபர்கள், பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள் போன்றோர் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.

கல்வி அமைச்சின் ஒழுங்கமைப்பில் அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான முஸ்லிம் கலாசாரப் போட்டி நிகழ்ச்சிகள் கடந்த சனி ஞாயிறு(07,08) ஆகிய தினங்களில் கொழும்பு சாஹிறா கல்லூரியில் இடம்பெற்றன. இப்போட்டிகளின் போது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்கள் நான்கு போட்டிப் பிரிவுகளில் கலந்து கொண்டு நான்கு போட்டிகளிலும் முதலாமிடங்களைப் பெற்றுக் கொண்டனர்.

சிரேஷ்ட மாணவர்களுக்கான ஹஸீதா, ரபான் நடனம் ஆகிய இரு குழுப் போட்டி நிகழ்ச்சிகளிலும், அறபு எழுத்தணி, அறபுத் தமிழ் இலக்கியம் ஆகிய இரு தனி நிகழ்ச்சிகளிலும் இப்பாடசாலை மாணவர்கள் முதலிடங்களைப் பெற்றுள்ளனர்.

இப்போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, கல்லூரியின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் போன்றோருக்கு தமது நன்றியினையும் தெரிவிப்பதாக அதிபர் ஏ.எச்.பௌஸ் இதன்போது தெரிவித்தார்.