மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தல திருவிழா நிறைவு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலத்தின் 70வது வருடாந்த திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, கொடியிறக்கத்துடன் (8) திகதி நிறைவு பெற்றது.

கடந்த ஓகஸ்ட் 30ம் திகதி, ஆலய பங்குத்தந்தை வின்சென்ட் ஜெரிஸ்டன் அடிகளார் தலைமையில், கொடியேற்றம் ஆரம்பமாகிய வருடாந்த திருவிழாவில் தினமும் திருச்செபமாலை, மறையுரைகள் மற்றும் திருப்பலி என்பன நடைபெற்றன.

கடந்த (07) திகதி மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயம் மற்றும் செங்கலடி புனித நிக்லோஸ் ஆலயத்திலிருந்து அன்னையின் திருத்தலத்தை, பாதயாத்திரையாக மக்கள் சென்றடைந்தனைத் தொடர்ந்து மாலை மறையுரை, நற்கருணை வழிபாடு, திருச்சொரூப பவனி, விசேட திருப்பலி என்பன நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து (08) திகதி காலை 7.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில், திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் கலந்துகொண்டார்.

ஓய்வுநிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில், ஆலய பங்குத்தந்தை வின்சென்ட் ஜெரிஸ்டன் மற்றும் அருட் தந்தையர்கள் இணைந்து விசேட கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

திருச்சொரூப பவனி, திருச்சொரூப ஆசீர்வாதமும் நடைபெற்று, கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

வவுணதீவு பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி, 243 இராணுவ படைப்பிரிவு கட்டளை அதிகாரி பிறிக்கேடியர் சந்திமகுமார சிங்க உட்பட கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

திருவிழா திருப்பலி நிறைவில் ஓய்வுநிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தல சிரேஸ்ட பங்கு சபையினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.