நற்பிட்டிமுனையில் திறந்து வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் அலுவலகம்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசியிருந்தேன் .எமக்கு எல்லை நிர்ணயம் தேவையில்லை. உடனடியாக கணக்காளர் நியமிக்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் முருகேசு ராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் இணைப்பு அலுவலகம் ஒன்றினை நற்பிட்டிமுனையில் திறந்து வைக்கப்பட்ட பின்னர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கடந்த பல்லாண்டு காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சனைகள் ஜனாதிபதி ரணில் காலத்தில் தீர்த்து வைக்கப்படும்.
எமது மக்களை ஏமாற்றிக்கொண்டு ஒரு சில அரசியல்வாதிகள் தங்களுடைய சுயலாபங்களை அடைந்தவையே மிச்சம். எல்லா மாவட்டங்களிலும் ஒப்பிடும் பொழுது அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிரதேசங்கள் அனைத்தும் பின் தங்கியே காணப்படுகின்றது.எதிர்காலத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை அங்கு வசிக்கின்ற மக்களே ஆள வேண்டும் அவர்களுக்கான சகல விதமான முடிவுகளையும் அவர்களே எடுக்க வேண்டும் . அவ்வாறு இருந்தால் மாத்திரமே இளைஞர்களின் தொழில் வாய்ப்புகளும் சரி அபிவிருத்தியிலும் சரி கொள்கையிலும் சரி எந்தவிதமான குறுக்கீடுகளும் இல்லாமல் சிறந்த முடிவுகள் எட்டப்படும். ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு நமது மக்களுக்கான வாய்ப்பாக நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்துவதை எதிர்பார்க்கின்றேன்.

இது தவிர ஜனாதிபதியிடம் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பாக பேசியிருந்தேன் .எமக்கு எல்லை நிர்ணயம் தேவையில்லை. உடனடியாக கணக்காளர் நியமிக்கப்படவேண்டும்என்று கேட்டுள்ளேன்.நான் மாகாண சபை உறுப்பினராக இருந்த போது நாவிதன்வெளி சம்மாந்துறை கல்முனை வலய தமிழ் பாடசாலைகளை உள்ளடக்கிய கல்முனை வடக்கு கல்வி வலயம் உருவாக வேண்டியதன் அவசியம் கருதி பல முன்னெடுப்புக்களை செய்திருந்தேன். அதனை நிவர்த்தி செய்து தரவேண்டும் எனும் கோரிக்கையையும் முன்வைத்தேன். பட்டதாரிகளுக்கு நேரடியாக தொழில் வழங்க வேண்டும்.அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், பொத்துவில், சம்மாந்துறை, நாவிதன்வெளி , காரைதீவு, பிரதேச தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் விபரித்திருந்தேன்.செப்டம்பர் 21 ஆம் திகதி நிச்சயமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாவார்.அதுவும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அதிகப் படியான வாக்குகளால் அமோக வெற்றி ஈட்டுவார் என்றார்.

மேலும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மஞ்சுள பெர்ணான்டோ காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் த.மோகனதாஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.