என்னை தோற்கடிப்பது இனத்தின் தோல்வியே

தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிடும் என்னை தோற்கடிக்க வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர். உண்மையில் தமிழ்ப் பொதுவேட்பாளராக போட்டியிடும் என்னை தோற்கடிப்பது என்பது எமது இனத்தையே தோற்கடிப்பதற்கு சமனாகும் என்பதனை மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்றைய தினம் (29) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டு வரும்
நமக்காக நாம் தேர்தல் கூட்டத்தில் உரையாற்றும் போது ப.அரியநேத்திரன் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவ்கையில்,

தமிழ்ப் பொதுவேட்பாளரை பல தமிழ் கட்சிகள் ஆதரிக்கின்றன. சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தமிழ்ப் பொதுவேட்பாளர் தேவையற்ற முயற்சி எனவும் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் கூறிவருகின்றனர். உண்மையில் தமிழ்ப் பொதுவேட்பாளராக போட்டியிடும் என்னை தோற்கடிப்பது என்பது எமது இனத்தையே தோற்கடிப்பதற்கு சமனாகும் என்பதனை மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவது என வடக்கு கிழக்கை சேர்ந்த 83 சிவில் அமைப்புகளும் 7 அரிசியல் கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பாக எடுத்த முடிவு. இந்த முடிவென்பது எமது இனத்தின் விடிவுக்காக எடுக்கப்பட்ட தீர்மானம் ஆகம். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை உதாசீனப்படுத்தி வரும் ஆட்சியாளர்களுக்கு தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு வழங்கும் பரிசாகவே தமிழ் பொதுவேட்பாளர் அமைந்துள்ளது.

தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்திய பின்னர் தென்னிலங்கையில் பெரும் அலையாக தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்புடன் பேச்சு நடத்த தொடர்ந்தும் பல தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்ப் பொதுவேட்பாளர் ஏற்படுத்தியுள்ள அச்சம் காரணமாக அவர்களை பீடித்திருக்கின்ற காய்ச்சலினாலேயே இவ்வாறு மாறி மாறி பேச்சுக்கு அழைப்புவிடுத்து வருகின்றனர்.

எமது இனத்தின் விடுதலைக்காக அகிம்சை ரீதியாக, ஆயுத ரீதியாக போராடிய இனம் இன்று இராஜதந்திர ரீதியாக ஒரு அரசியல் பயணத்தில் ஈடுபட்டு வருகிறது. இராஜதந்திரம் என்பது வெறுமனே இலங்கையிலே தீர்மானிக்கின்ற விடயம் அல்ல. தமிழர்கள் ஒன்று திரண்டு ஒற்றுமையை வெளிப்படுத்துவதன் மூலம் இலங்கைக்கு வெளியே உள்ள சக்திகளுக்கு ஆணித்தரமான செய்தியை வெளிப்படுத்த முடியும்.

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னரான கடந்த 15 ஆண்டுகளில் நாங்கள் மூன்றரை ஜனாதிபதிகளை கண்டிருக்கின்றோம். மூன்றரை ஜனாதிபதிகளுடனும் பேசியிருக்கின்றோம். எல்லோருமே எம்மை ஏமாற்றியிருக்கின்றார்கள். தற்போது மக்களால் தெரிவு செய்யப்படாது பாராளுமன்றம் மூலம் தெரிவு செய்யப்பட்டு அரை ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்ரமசிங்கவும் ஏமாற்றியுள்ளார்.

பிரதான வேட்பாளர்களாக போட்டியிடும் மூவரும் கடந்த 15 ஆண்டுகளில் தோல்வியடைந்தவர்கள். நாமல் ராஜபக்ச முதல் முறையாக போட்டியிடுகிறார். இலங்கை ஜனாதிபதியாகி ஆட்சி பீடத்தில் ஏறப்போபவனும் அல்ல. ஜனாதிபதி மாளிகையை அலங்கரிக்கப்போபவனும் அல்ல. அந்த போட்டி களத்தில் நாங்கள் போட்டியிடவில்லை. அவர்களது ஆட்சிபீடத்தில் ஏறுவது எமது நோக்கம் அல்ல. இழந்த உரிமை எங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும். தமிழ் மக்கள் உரிமையை பெற்றால் மட்டும்தான் இந்த நாட்டில் சமாதானம் நிலைக்கும் என்பதனை வட கிழக்கு தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றோம் என்பதனை வெளிப்படுத்துவதற்காகவே தமிழ்ப் பொதுவேட்பாளராக போட்டியிடுகின்றோம்.

எந்த நாட்டிடமும் கடன் வாங்குங்கள். ஆனால் எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள். இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு தரவேண்டும் என்பதனை தொடர்ச்சியாக வலியுறுத்தும் வகையில்தான் இந்த ஜனாதிபதி தேர்தலை ஒரு களமாக பாவிக்கின்றோம். அதில் நான் ஒரு அடையாளமாக களமாட இறங்கியுள்ளேன்.

தற்போதைய நிலையில் தமிழ் மக்கள் போரை விரும்பவில்லை என்பது உண்மை. இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் அரசியல் தீர்வை விரும்பவில்லை, அபிவிருத்தியைத்தான் விரும்புகின்றார்கள் என்ற செய்தியை இராஜதந்திரிகளிடம் கூறிவருகின்றது.

தமிழ்மக்களாகிய நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல. அதேநேரத்தில் தமிழர்களது அபிலாசைகள் மிக முக்கியமாகும். அபிலாலைகளின் அடிப்படையில் உரிமைகளுக்காகத்தான் பல தியாகங்களை செய்திருக்கின்றோம். அந்த தியாகங்களுக்கான விடை எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனை நாங்கள் பெறவேண்டுமானால் நாங்கள் இன்றும் உறுதியுடன் இருக்கின்றோம் என்பதனை வெளிக்காட்டுவதற்காக ஜனாநாயக ரீதியான போராட்ட வடிவமாகவே தற்போதைய ஜனாதிபதி தேர்தல் களத்தை கையிலெடுத்திருக்கின்றோம்.

தமிழ் மக்களின் குறியீடாகவே தமிழ்ப் பொது வேட்பளாராக களமிறங்கியுள்ளேன். கடந்த எட்டு ஜனாதிபதிகள் தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளார்கள். இனிமேலும் நாங்கள் ஏமாறத் தயாரில்லை என்பதுடன் புதிதாக தெரிவு செய்யப்படும் ஒன்பதாவது ஜனாதிபதிக்கு தமிழ் மக்களுக்கு அரசியில் தீர்வு உடனடியாகவே வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தும் வகையில் செப்டெம்பர் 21 ஆம் திகதி தமிழ் மக்கள் அணிதிரண்டு தவறாது சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். வாக்குசீட்டில் உள்ள சங்கு சின்னத்திற்கு இடுகின்ற ஒவ்வொரு புள்ளடியும் எமது உரிமைக்கான குரல். இவ்வாறு சங்கு சின்னத்திற்கு போடப்படும் ஒவ்வொரு புள்ளடியும் வட கிழக்கு தமிழர்களை பாரிய சக்தியாக வலுப்படுத்துவதுடன் இலங்கை, இந்தியா, சர்வதேச நாடுகளுக்கும் தமிழர் பலத்தை வெளிக்காட்ட முடியும் என தெரிவித்தார்.