(துறைநீலாவணை நிருபர்) மூவின மக்களின் விருப்புக்களுக்கு அமைவாக ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் செயற்பட்டு வருகின்றார்.
பல்லினச் சமுகத்தினர் வாழ்கின்ற பன்மைக் கலாசாரம் பின்பற்றப்படுகின்ற நாட்டில் அனைவருக்கும் சகவாழ்வினை ஏற்படுத்துவதே ஐக்கிய மக்கள் சக்தியின் இலக்காகும். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பிரதேச மட்டக் குழுக்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் மட்டு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் சஜித் பிரேமதாச அவர்களின் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினை தூக்கிப்பிடிக்கும் கும்பல்கள் தமிழ் மக்களிடையே பொய்யான பிரச்சாரங்களை சமூக வலைத்தளங்களில் முன்னெடுத்து வருகின்றனர்.சஜித் பிரேமதாச முஸ்லிங்களுக்கு நாட்டினை தாரை வாக்கப் போகின்றார்.என்பதுடன் முக்கிய அமைச்சுக்களை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கி நாட்டினை இக்கட்டான நிலைமைக்கு கொண்டு செல்லவுள்ளதாக பொய்யான தகவல்களை தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி வாக்கு வங்கியினை திசை திருப்ப முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இவர்களின் பொய்யான பிரச்சார நடவடிக்கைககளுக்கு மக்கள் அடிபணியக் கூடாது.சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சராக இருந்த போது சஜித் பிரேமதாச அவர்கள் ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கிய வீடமைப்புத் திட்டங்களுக்கு மேலதிகமாக பாகுபாடின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களுக்கு வழங்கியிருக்கின்றார்.இது அவரது நல்லலெண்ணச் செயற்பாடுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
2019 காலப்பகுதியில் ஆட்சி அதிகாரங்களை பொறுப்பேற்ற ஊழல் அரசாங்கத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட ஊழல்களை மூடி மறைக்கும் செயற்பாடுகளே தற்போது அரங்கேற்றப்பட்டு வருகின்றன.இதனை முற்றாக தடுப்பதற்கான பலம் மக்களின் பொன்னான வாக்குகளில் தங்கியிருக்கின்றது.மீண்டும் ஊழல் வாதிகளுக்கு ஆட்சியினை வழங்க முடியாது.இன்றைய கால கட்டத்தில் தேவைக்கு அதிகமான வரிச்சுமையினை மக்கள் மத்தியில் திணித்து மக்களை கடனாளிகளாக அரசாங்கம் மாற்றியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மத்திய வங்கியில் நடைபெற்ற பிணை முறிவு மோசடியில் திரைசேரிக்கு 19.5 பில்லியன் இழப்பு ஏற்பட்டது.அதே போன்று கோத்தபாய ஆட்சியில் வரி சீரமைப்பு மோசடிகளால் திரைசேரியின் வருமானம் 600 பில்லியனால் வீழ்ச்சியடைந்தது.சீனி இறக்குமதி மோசடியில் 16 பில்லியனும் ,வெள்ளைப்பூடு இறக்குமதி மோசடி மூலமாக 7.4 பில்லியன் இழப்பீடு ஏற்பட்டிருந்தன.
உணவுப் பண்டங்கள் முதல் குழந்தைகளின் பால்மா வரைக்கும் விலையேற்றம் மாத்திரமல்லாது அரச வைத்தியசாலைகளில் முக்கிய நோய்களுக்கான மருந்துத் தட்டுப்பாடு இலவச மருத்துத்துறை இன்று ஊழல் வாதிகளின் செயற்பாடு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது.இதற்கு முன்னாள் சுகாதார அமைச்சர் சிறந்த எடுத்துக்காட்டு வெறுமனே மக்களின் வரிப்பணம் வீண்விரையம் செய்யப்பட்டிருக்கின்றது.தற்போது அமைச்சுப்பதவிகளில் இருந்து அகற்றப்பட்ட இருவருக்கும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டு வாகன ஒழுங்கமைப்பு மற்றும் அலுவலக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றமை தேர்தல் விதிகளுக்கு முரணான செயற்பாடாகும்.
சாதாரணமாக அன்றாடம் கூலித்தொழில் மூலமாக வருமானத்தினை ஈட்டுகின்ற பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரச் செயற்பாடுகள் கேள்விக் குறியாகும்.இதற்கு முழுப்பொறுப்பு ஊழல் வாதிகளின் முறைகேடான நடவடிக்கைகளாகும்.கடந்த மஹிந்த ராஜ பஷ்ச அரசாங்கம் பெற்ற கடனுக்கு மேலதிகமாக தற்போதைய அரசாங்கமானது மக்களை அடகுவைத்து ஐ.எம்.எப் மற்றும் உலக வங்களில் கடன்களைப்பெற்று தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் தங்களின் காப்பாளர்களாக செயற்படுகின்ற அரசியல் வாதிகளுக்கு கோடிக்கணக்கான நிதியினை வழங்கி வாக்கு வங்கியினை அதிகரிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துவருகின்றனர்.தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக இவ்வாறான கோடிக்கணக்கான நிதியினை அபிவிருத்திக்கு வழங்காது தேர்தலை இலக்கு வைத்து பாரிய நிதி ஒதுக்கீட்டினை அரசாங்கம் வழங்கியிருக்கின்றமை மக்கள் மத்தியில் சந்தேகத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது.
இலங்கையில் என்றும் இல்லாத வகையில் நிதி அமைச்சுக்கு இரு அமைச்சுக்கள் இது தேவையற்ற நியமனம் மாத்திரமல்லாது பாரிய செலவீணத்தினை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.லஞ்ச ஊழல்களுடன் தொடர்பான பல அரசியல் வாதிகள் தங்களைப் பாதுகாக்கும் நோக்கில் உண்மைக்கும் புறம்பான வகையில் உண்மையினை மூடி மறைத்து வீரவசங்களைப் பேசி வருகின்றனர்.இவர்களுக்கான பதில் நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச அவர்களின் வெற்றியின் பிற்பாடு தெரியவரும்.தற்போது நெத்தலி மீன்கள் பிடிபட்டிருக்கின்ற ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் சுறா மீன்களும் வலையில் அகப்படும்.அப்போது ஊழல் அரசியல் வாதிகளின் செயற்பாடுகள் வெளிக்கொணரப்படும் அதற்கு ஏற்ற வகையில் மக்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.