திருடர்களின் ஆதரவின்றி மக்களின் ஆதரவோடு நாட்டை பொறுப்பேற்பேன்

எனக்கு கிடைக்கின்ற மக்கள் வரத்தை என் உயிரை போல் பாதுகாத்து, அதன் கௌரவத்தை பாதுகாத்து இன, மத, குல, கட்சி பேதமின்றி நாட்டை அபிவிருத்தி அடையச் செய்வேன். ஐக்கிய மக்கள் சக்திக்கும் எனக்கும் திருடர்களுடன் எந்த டீளும் இல்லாத காரணத்தினால், நாட்டின் வளங்களையும் சொத்துக்களையும் பணத்தையும் திருடிய திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். எனக்கும் எனது குழுவுக்கும் அதனை எந்த தயக்கமும் இன்றி நிறைவேற்ற முடியும். நான் ஜனாதிபதி பதவிக்கும், பிரதமர் பதவிக்கும், எனது சுய கௌரவத்தையும் மக்களின் பாரம்பரியத்தையும் காட்டிக் கொடுக்கவில்லை. மக்களின் ஆணையுடன் நாட்டுக்கான எனது பொறுப்பை ஏற்றுக்கொள்வேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற உடன் திருடர்களை பாதுகாக்கின்ற வாயிற் காவலாளியாகவும், பொலிஸ் மா அதிபராகவும் செயற்படுகின்றார். அவ்வாறான ஜனாதிபதி பதவி தனக்குத் தேவையில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த 23 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி அம்பாறை பஸ் நிலையத்திற்கு அருகில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா தொற்று பரவல் மற்றும் நாட்டை வங்கரோத்து அடையச் செய்தமை ஆகிய மூன்று காரணங்களாலும் நாட்டின் விவசாயிகள் பாரிய சிக்கல்களை எதிர் கொண்டார்கள். இயற்கை உர ஊழல் மற்றும் நானோ ஊழல் என்பனவற்றின் காரணமாக விவசாயிகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உயர்தரத்திலான 50 கிலோ கிராம் உர மூடை ஒன்றை 5000 ரூபாவிற்கு வழங்குவதோடு, நியாயமான விலையில் இரசாயன மருந்துகளையும் திரவ உரங்களையும் முறையாக கமநல சேவை மத்திய நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்குவதோடு நாடு, சம்பா, கீரி சம்பா, கெகுலு போன்ற அரிசிகளுக்கு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. அத்தோடு நாட்டில் செயல்படுகின்ற அரிசி மாபியாவை ஒழிப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

🟩 செப்டம்பர் 21 சக்தி வாய்ந்தவர்களின் அதிகாரம் மக்களிடம் கிடைக்கும் நாளாகும்.

அழுத்தங்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டுள்ள விவசாயிகளின் விவசாயக் கடன்களை இரத்து செய்வோம் என்று கூறுகின்ற போது அதனை எவ்வாறு மேற்கொள்வது என்று நயவஞ்சகர்கள் கேட்கின்றார்கள். பிணை இன்றி எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் கோடிக்கணக்கில் வங்கிகளில் கடனை பெற்றுக் கொண்டு அதனை மீளச் செலுத்தாதவர்கள் அம்பாறை மாவட்டத்திலும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அரசியல்வாதிகளின் உதவிகள் கிடைப்பதால் அந்தக் கடனை இரத்துச் செய்ய முடியுமாக இருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அந்த சக்தி வாய்ந்தவர்களுக்கு கிடைத்த அதிகாரம் இந்த மண்ணிலே இருக்கின்ற சாதாரண மக்களுக்கு கிடைக்காவிட்டாலும் அந்த அதிகாரம் செப்டம்பர் 21 ஆம் திகதி மக்களுக்கு கிடைக்கும் நாள் உதயமாகும். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி விவசாயிகளின் விவசாய கடனை இரத்து செய்கின்ற யுகத்தை உருவாக்குவோம். கோடீஸ்வரர்கள் ஆட்சி செய்கின்ற காலமா மக்கள் ஆட்சி செய்கின்ற காலமா என்பதை தீர்மானிக்கும் உரிமை மக்களிடமே காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது சுட்டிக்காட்டினார்.

🟩 வறுமையை போக்குவதற்கான புதிய வேலைத் திட்டங்கள்.

ஜனசவிய வறுமையை ஒழிப்பதற்கு ஊன்றுகோலாக அமைந்த வேலைத் திட்டமாகும். தற்பொழுது வறுமையை ஒழிக்கும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதில்லை என்பதால் ஜனசவிய, சமுர்த்தி, கெமிதிரிய போன்ற வேலை திட்டங்களில் உள்ள சிறந்த விடயங்களை உள்ளடக்கி, வறுமையைப் போக்கும் புதிய வேலை திட்டம் ஒன்றை முன்னெடுப்போம். அதனூடாக இலவசமாக பணம் வழங்கப்பட மாட்டாது. கிடைக்கப்பெறுகின்ற நிவாரணங்களைக் கொண்டு 24 மாதங்களுக்குள் வறுமையில் இருந்து மீண்டு வருவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டினார்.

எவரும் தொடர்ந்தேச்சையாக வரியவர்களாகவும் அல்லது அரசாங்கத்தின் அடிமைகளாவும் இருப்பதற்கு விரும்புவதில்லை. எனவே நுகர்வு, சேமிப்பு, உற்பத்தி, ஏற்றுமதி முதலீடு ஆகிய ஐந்து துறைகளுக்குள் வழங்கப்படுகின்ற நிதியை பயன்படுத்த வேண்டும் என்பதோடு, அதற்காக 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 20000 ரூபா வீதம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 அம்பாறைக்கு புதிய பல்கலைக்கழகம்.

சோளம், பயறு, சோயா போன்ற பயிர்களை பிரபல்யப்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஒருவேளை உணவுக்கு தேசிய விவசாயிகளை இணைத்து விவசாயிகளை மேம்படுத்துவோம். கல்வித்துறைக்காக ஊவா வெல்லஸ்ஸ அல்லது கிழக்கு அல்லது தென்கிழக்கு பல்கலைக்கழகங்களோடு இணைக்கப்பட்ட பல்கலைக்கழகம் பீடம் ஒன்று உருவாக்கப்பட்டு, Hardy நிறுவனம் போன்ற தொழிற்பயிற்சி நிறுவனங்கள், முகாமைத்துவ பயிற்சி நிறுவனங்கள் என்பனவற்றை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

🟩 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை பாதுகாப்போம்.

அரசாங்கத்தின் பிழையான கொள்கை திட்டங்கள் காரணமாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு 30 இலட்சம் ரூபா கொடுத்து, அவர்களை தொழிலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்த போது, அந்தக் கொள்கை திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியே முறியடித்தது. சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவ்வாறான அநியாயம் ஒன்று இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 அரச ஊழியர்களுக்கான சலுகைகள்.

அரச ஊழியர்களின் சம்பளத்தில் 24% அதிகரித்து வாழ்க்கைச் செலவை 25,000 ரூபா வரை உயர்த்தி அடிப்படைச் சம்பளத்தை 57 ஆயிரத்து 500 ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சம்பளம் வழங்கப்படுகின்ற அதே தினத்திலே ஒருங்கிணைந்த சலுகை கொடுப்பணவுகளையும் வழங்குவோம். அரச ஊழியர்களுக்கான தீர்வை வரி சலுகை வழங்கப்படுவதோடு, கல்வித்துறை அதிகாரிகளின் சம்பளம் முரண்பாட்டு பிரச்சினையும் தீர்க்கப்படும். அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளை சேவை யாப்பின் ஊடாக வழங்குவதோடு, நாடளாவிய ரீதியில் சேவைகளை விருத்தி செய்வதற்காக அரச அதிகாரிகளுக்கு காணப்படுகின்ற பரீட்சைகளின் அளவினையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

🟩 இராணுவத்தினருக்கும் பொலிசாருக்கும் சலுகைகள்.

தேர்தல் காலங்களில் பொலிசாருக்கு 28 ஆயிரம் ரூபா கொடுப்பனவு கிடைத்தாலும், அதற்குப் பிறகு அவர்களுக்கு அது கிடைப்பதில்லை. பொலிசார் மேற்கொள்கின்ற விசேட சேவைகளுக்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளை மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக தொடர்ந்தும் வழங்குவதோடு, இந்தத் துறையில் காணப்படுகின்ற பதவி உயர்வு பிரச்சினைக்கும் தீர்வினை பெற்றுக் கொடுப்போம். அதேபோன்று இராணுவத்தினருக்காகவும் one rank one pay திட்டத்தை நடைமுறைப்படுத்தி, நாட்டுக்காக வீர தீரமாக செயல்பட்ட இராணுவ அதிகாரிகளை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.