( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த தேரோட்ட மகோற்சவம் எதிர்வரும் 4 ஆம் தேதி ஆரம்பமாக இருக்கும் இந்த வேளையில், அதற்கான பிரதான வீதி குன்றும் குழியுமாக படுமோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
குறிப்பாக மகிழடித்தீவு சந்தியிலிருந்து அம்பிளாந்துறைச்சந்தி வரை மிக மோசமாக போக்குவரத்துக்கு பொருத்தமில்லாதவகையில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் வாகனங்கள் பாதசாரிகள் மிகவும் அசௌகரியமடைந்துவருகின்றனர்.
இந்த வீதியில் பிரதேச செயலகம் பிரதேச சபை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம் ஆசிரியர் வள நிலையம் கோட்டக்கல்வி அலுவலகம் பல பாடசாலைகள் இவ்வாறு பல முக்கியமான நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன.
ஆனால் அதற்கான இந்த பிரதான வீதி பல வருட காலமாக செப்பனிடப்படாமல் கைவிடப்பட்ட காரணத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
ஆலய மகோற்சவம் ஆரம்பமாக இருக்கின்ற இந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பாதையால் பயணிக்க இருக்கின்றார்கள்.
எனவே இந்த வீதியை புனரமைத்து தர வேண்டும் என்று கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தனிடம் பல பொதுஅமைப்புகள் மகஜர்களை வழங்கி இருக்கின்றன.
முதலைக்குடா கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில் அதன் தலைவர் முன்னாள் தவிசாளர் அதிபர் சிவ. அகிலேஸ்வரன் செயலாளர் கி.சுரேஸ்குமார் கையெழுத்திட்டு நேற்று முன்தினம் கையளித்தனர்.
இதன் பிரதிகள் ராஜாங்க அமைச்சர் சதா.வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் கோவிந்தன் கருணாகரன் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலருக்கு பிரதியிடப்பட்டு இருக்கின்றது.