கல்முனை தொகுதி தேர்தல் குழு தலைவராக ஹரீஸ் எம்.பி. நியமனம்.

(நூருல் ஹுதா உமர்) ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் அமோக வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள கல்முனை தேர்தல் தொகுதியின் தேர்தல் நடவடிக்கை செயற்குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் மருதமுனை தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவின் கல்முனை தொகுதியில் வெற்றியை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்கள், பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.