எட்டு ஜனாதிபதிகளும் ஏமாற்றியே சென்றார்கள் .நாம் தமிழர் என்பதை உணர்த்துவோம்.

எட்டு ஜனாதிபதிகளும் ஏமாற்றியே சென்றார்கள்
===========================
ஒன்பதாவது ஜனாதியதியிடமும் தீர்வு இல்லை
=============================
தமிழர்களுக்கான சிந்தனைக் கிளறலுக்குரிய சில கேள்விகள்
=============================

ரணில் விக்கிரமசிங்க:
***************************
1) ரணில் கடந்த நல்லாட்சிக் காலத்தில் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினைத் தருவதாகக் கூறினார்.நாலரை ஆண்டுகளில் அவர் அதனைத் தந்தாரா?

2) கல்முனை வடக்கு பிரததேச (தமிழ்ப் பிரிவு), பிரதேச செயலகத்தினை முழுமையாக இயங்குவதற்கு அனுமதி அளிப்பதாகக் கூறினார். செய்தாரா?

3) மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் இருந்து நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக அயல் மாவட்ட சிங்களக் குடியேற்ற வாசிகளை வெளியேற்றி, மேய்ச்சல் தரையை விடுவிப்பதாகக் கூறினார். அது நடைபெற்றதா?

4) விடுதலைப் போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இனப்பிரச்சினையத் தீர்க்கப் போவதாகக் கூறினார்.அது நடைபெற்றதா?

5) குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்பாக நிறுத்துவேன் என்று ரணில் சொன்னார். இப்போது பாரிய குற்றங்களோடு தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கும் நபர்களுடன், இணைந்துள்ளது தெரியவில்லையா?

அநுரகுமார திசாநாயக்க
*******************************

1) இவர் பதின்மூன்றாவது யாப்புத் திருத்தத்தையோ சமஷ்டியையோ தருவேன் என்று சொல்ல மாட்டேன் என்றார். இதன் அர்த்தம் என்ன?

2) இணைப்பில் இருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை நீதிமன்றம் சென்று உடைத்தவர்கள் யார்?

3) வடக்கில் ஒரு கலாசாரம்,தெற்கில் ஒரு கலாசாரம் இருப்பதைத் தான் விரும்பவில்லை என்று சொன்னவர் யார்? இதன் அர்த்தம் என்ன?

4) 2005—2009 வரை தமிழின அழிப்புப்போரை மகிந்த செய்த போது அநுர தரப்பு யாருடன் இருந்தார்கள்?

5) இனவழிப்பு யுத்தத்திற்கு என்று சிங்கள இளைஞர்களை மூளைச்சலவை செய்து இராணுவத்தில் இணைத்தவர்கள் யார்?

சஜித் பிரேமதாச
********************
1) 1000 பௌத்த விகாரைகளை வடக்கு கிழக்கில் அமைக்க வேண்டும் என்று கூறியவர் யார்?

2) குருந்தூர் மலை, வெடுக்கு நாறிமலை, தையிட்டி, நெடியகல் மலை (வடமுனை),காயான்கேணி,பனிச்சங்கேணி,வாகரை,தியாவட்டவான்,ஜயந்திபுரம் போன்ற இடங்களில் விகாரைகள் அமைக்கப்படுவதற்கும் மேலும் பல இடங்களில் விகாரைகள் அமைக்கப்படுவதற்கும் வித்திட்டவர் யார்?

3) விகாரைகள் அமைப்பின் பின்னால் பிக்குகள் வருகை.சிங்களவர் குடியேற்றம், படையினர் பாதுகாப்பு என்று ஆக்கிரமிப்புகள் நடைபெறுவதற்கு வழிசமைத்தவர் யார்?

4) நம்மவர் உறவுகள் தானே, அவ்வாறு நடந்தால்தான் என்னவென்று பார்த்துக் கொண்டிருக்க தயாராகின்றவர்கள் யார்?

5) ஸ்ரீலங்கா சிங்கள தேசந்தானே சேர்ந்து வாழ்வதற்கு, இதுவும் சகஜந்தானே என்று கூறத்தக்கவர்கள் யார்?

# இப்படியான நிலைமையில், இந்த மூன்று வேட்பாளர்களுக்கும் தமிழர்கள் எந்த அடிப்படையில் வாக்களிக்க நாம் கூற முடியும்?

# வெல்லக் கூடியவர்களுக்கு வாக்களிப்பதுதான் தமிழரசுக் கட்சியின் கொள்கையா?

# அவ்வாறு கட்சியின் கொள்கையை மாற்றியது யார்?

# இப்படியெல்லாம் பிரச்சினைகள் இருக்கும் போது தமிழர்களின் அடையாளமாகத் தேர்தலில் இறக்கப்பட்டுள்ள தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதில் என்ன தவறு உள்ளது?

# எட்டுத் தடவைகள் ஏமாற்றப்பட்ட பின்னர்,முதல் தடவையாக இறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதில் தவறுகள் ஏதும் உண்டா?

# தமிழர்கள்,தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையின் குறியீடாக தமிழ் வேட்பாளர் இருப்பது குற்றமா?

# தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று 2000 காலப்பகுதியில் சிந்தித்த தலைவர் யார் தெரியுமா?

# அந்த சிந்தனையை ஏற்றுத் தமிழர்கள் 2004 இல் உச்சமாக வாக்களித்தார்கள் அல்லவா?

# தமிழர்களின் ஒரே குரலான ஒற்றுமைச் செய்தியாக, தமிழ்ப் பொது வேட்பாளரின் தமிழர் தாயக வாக்குகளின் வெற்றி அமையக் கூடாதா?
# உள்நாட்டுப் பொறிமுறையால் யுத்தத்தின் பின்பு ஏதாவது தீர்வு கிடைத்துள்ளதா?

# யுத்தத்தின் பின்பு 15 ஆண்டுகள் நாங்கள் சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட வில்லையா?

# யுத்தத்தின் பின்பும் நாம் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வில்லையா?

# அவர்கள் நமது கோரிக்கைகளை நிறைவேற்றினார்களா?

# சிங்களத் தலைவர்கள் நம்மை 75 ஆண்டுகளாக ஏமாற்றியுள்ளார்கள் என்பதை சர்வதேசத்திற்கு தமிழர்களாக மக்கள் தீர்ப்பு மூலமாகக் கூறுவது குற்றமா?

# அறவழிப் போராட்டம், ஆயுதப் போராட்டம், இராஜதந்திரப் போராட்டம், அடுத்த கட்டமாக தமிழர் பொது வேட்பாளர் சார் ஒற்றுமைக் குறியீட்டுச் செய்தி,ஒரே குரலில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான செய்தி என்பவற்றை உள்நாட்டிலும் பன்னாடுகளிலும் உரைப்பதில் தவறுண்டா?

# இதன் மூலமாக தேர்தலின் பின்னர் பொதுவேட்பாளர் செய்தி மூலமாக பொதுக் கட்டமைப்பின் ஒற்றுமைப் பாதையில் தமிழர்கள் பயணிக்க முடியாதா?

# தமிழ்த் தேசியத் கட்சிகளும் தமிழர்களும் ஒன்றுபடுவதற்கான முயற்சியின் ஆரம்ப நடவடிக்கையாக தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டுவது சரியல்லவா?

# சங்குக்கே வாக்களிப்போம்,நாம் தமிழர் என்பதை உணர்த்துவோம்.