டெங்கு சிரமதானமும் விழிப்புணர்வு ஊர்வலமும்!

நாட்டில் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை அண்மைக்காலத்தில் 3500 ஐவிட அதிகரித்துள்ளதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் சிரமதானப்பணிகளும்(25 நடைபெற்றன.

கிறிஸ்தவ குடும்பசபை போதகர் எஸ். ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுச்சுகாதார பரிசோதகர் சிவசேகரம் சிவகாந்தன் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் பங்கற்றனர். பாடசாலை மாணவச் சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டதுடன் அவற்றை அழிக்கவேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து சிறுவர்கள் எல்லை வீதியூடாக ஊர்வலமாகச் சென்று பிரதேச சுகாதார வைத்தியதிகாரி காரியாலயத்தை அடைந்தனர்.

அங்கிருந்து மாணவர்கள் ஐந்து அணிகளாகப் பிரிந்துசென்று வைத்தியசாலை வீதி, பொதுச்சந்தைவீதி, பிரதேச செயலக வீதி, பிரதான வீதி மற்றும் எல்லைவீதி ஆகிய பாதையோரங்களைச் சுத்தம் செய்தனர்.

சுமார் நான்கு மணித்தியாலங்களாகச் சிரமதானப் பணி நடைபெற்றது.

பெரும் எண்ணிக்கையிலான பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன.

இதன்போது சேகரிக்கப்பட்ட குப்பைகள் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் உழவு இயந்திரங்கள் மூலமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.