பறவைகள் சரணாலயத்தை மையப்படுத்தி விவேகானந்த பூங்கா திறந்து வைப்பு

விவேகானந்தரின் சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் நோக்குடன் க. சற்குனேஸ்வரன் அவர்கள் ஸ்தாபித்து வழிநடத்திக்கொண்டிருக்கும் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை தலைமை தளமாக கொண்டு தமிழர் தாயக பகுதிகளில் பல சமூக சேவைகளை இரண்டு தசாப்தங்களாக முன்னெடுத்து வரும் சமூக நலன்புரி அமைப்பின் ( SWO) மற்றொரு மகத்தான செயற்பாடாக மட்டக்களப்பில் அமைக்கப்பட்டு வரும் விவேகானந்த சிறுவர் பூங்கா இன்று ( 25 ) காலை 9 மணிக்கு உத்தியோகபூர்வமாக பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்முனை சாலை வழியோரமாக மட்டக்களப்பு நகரிலிருந்து ஏறத்தாழ 18 கிலோமீட்டர் தொலைவில் குருக்கள்மடம் ஏத்தாளைகுளம் பறவைகள் சரணாலயத்திற்கு அருகாமையில், குருக்கள்மடம் கிரான்குளம் கிராம எல்லைகளுக்கு மத்தியில் பாதுகாக்கப்பட்ட இலவச வைத்திய சேவையினை வழங்கும் சத்தியசாயி சஞ்ஜீவனி வைத்தியசாலைக்கு முன்பாக இயற்கை எழில் சூழ்ந்த வனப்பு மிக்க பகுதியில் இவ் சிறுவர் பூங்கா பல தன்னார்வலர்களின் மில்லியன் கணக்கான நிதிப்பங்களிப்புடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இவ் விவேகானந்த பூங்கா சிறுவர்களுக்கான பொழுது போக்கு தளம் என்பதை தாண்டி ஆன்மீக உணர்வை தூண்டும் ஒரு விவேகானந்தரின் ஆலயம் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் மத்தியில் 30 அடி உயர பிரமாண்ட விவேகானந்த உருவச்சிலை பார்ப்பதற்கு பிரமிப்பை உண்டு பண்ணுகிறது இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள விவேகாந்தரின் அமர்ந்த நிலையில் அமைந்த மிக உயரமான சிலை என்ற சிறப்பை இச் சிலை பெறுகிறது. அத்தோடு 07 அடி உயரமான நிற்கும் நிலையிலமைந்த விவேகானந்தரின் பல உருவச் சிலைகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு அமைதியாக மனதை ஒரு நிலைப்படுத்தி தியானத்தில் ஈடுபடும் நோக்கில் விவேகானந்தரின் இல்லங்கள் பல அமைக்கப்பட்டு திரும்புமிடம் எங்கும் விவேகானந்தரின் திருவுருவங்களுடன் கண் கவர் வர்ணங்களில் பூத்துக்குலுங்கும் பூக்களையும் பூமரங்களையும் கொண்ட பூ மரச்சோலையாக இப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இப் பூங்காவில் சிறுவர்கள் பொழுதை களிக்கும் நோக்குடன் பல நவீன விளையாட்டு உபகரணங்களை கொண்ட விளையாட்டு முற்றம் அமைக்கும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டுச் செல்லப்படுவதுடன் சிற்றுண்டிச்சாலை என அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய ஓர் இடமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இன்று ( 25 ) பல ஆன்மீக அதிதிகளின் பங்கு பற்றுதலுடன் சமூக நலன்புரி அமைப்பின் ஸ்தாபக தலைவர் க. சற்குணேஸ்வரன் அவர்களின் தலைமையேற்றலுடன் திறப்பு விழா இடம்பெற்றது.