பசியோடு இருந்த நாட்டு மக்களுக்கு உணவு வழங்கியமை இன்று குறையாக சொல்கிறார்கள். பசியோடு இருந்த மக்களுக்கு உணவு வழங்கியது பிழையா? பொத்துவில் கெட ஓயா திட்டம் நிச்சயம் அது பூர்த்தியாகும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை நாட்டில் மீண்டும் ஜனாதிபதியாக்கி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான “இயலும் ஸ்ரீலங்கா” மாபெரும் பிரச்சாரக் கூட்டம் பொத்துவில் ஜலால்தீன் சதுக்க மைதானத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். எம். முஷாரப் தலைமையில் நேற்று இரவு (23) நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,
இலங்கையர் என்ற அடிப்படையில் நாம் நன்றாக சிந்திக்க வேண்டும். 2022 ஆம் ஆண்டு மே , ஜூன், ஜூலை மாதம் நாட்டு மக்கள் பசியோடு இருந்தார்கள் உணவு இல்லை, பெற்ரோல் இல்லை, கேஸ் இல்லை, மருந்து பொருட்கள் இல்லை என முழு நாடும் வங்குரோத்து நிலையை அடைந்து பொருளாதாரத்தில் பின்னின்றோம். சாப்பிடுவதற்கு இரண்டு போகங்கள் வேளாண்மை செய்ய முடியாமல் இருந்தோம். உல்லாச பயணிகள் நாட்டுக்கு வரவில்லை. இந்த இக்கட்டான நிலையிலேயே நாட்டை நான் பாரமெடுத்தேன். நாட்டின் தலைவர் என்ற வகையில் நாட்டு மக்கள் பசியோடு இருப்பதை, கவலையோடு இருப்பதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன். எந்த நேரமும் மக்களின் கஷ்டங்களை அவதானித்துக் கொண்டே இருக்கின்றேன். அன்று எனது கடமை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணமாக இருந்தது. தனி உறுப்பினராக இருந்தாலும் இந்த பாரிய பொறுப்பை, சவாலை நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டேன். இதன் காரணமாக 2023, 24 களில் இரண்டு போகங்களும் வேளாண்மை செய்ய முடிந்திருக்கிறது 2024 ல் மாரி போகமும் சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. வெற்று காணிகள் விவசாயம் செய்யாமல் கிடப்பதற்கு நான் இடமளிக்கவில்லை.
இன்று என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் நான் இந்த பதவியை ஆசைப்பட்டு எடுத்ததாகவும் சஜித் பிரேமதாசாவின் பதவியை நான் எடுத்ததாகவும் சொல்கிறார்கள். மக்கள் துக்கத்தோடு கஷ்டத்தோடு வாழ்ந்தது அவருக்குத் தெரியவில்லையா? அவர் ஏழை மக்களை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார். அன்று ஏழை மக்களின் கஷ்டங்களையும் துன்பங்களையும் உணர்ந்திருந்தால் பிரதமர் பதவியை ஜனாதிபதி பதவியை எடுத்திருக்கலாம். நாட்டை முன் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. தங்களுடைய அரசியலையும் தங்களுடைய கட்சியின் எதிர்காலத்தையும் பற்றி மாத்திரமே சிந்தித்தார்கள். நாம் நாட்டையும் மக்களையும் பற்றி மாத்திரமே சிந்தித்தோம். அதனால் அவர்கள் ஓடினார்கள் அந்த ஓட்டம் ஒலிம்பிக் பரிசில் தான் நிறைவு பெற்றது. நாட்டு மக்களுக்கு உண்பதற்கு உணவு வழங்கியதையும், பெற்ரோல் வழங்கியதையும், கேஸ் வழங்கியதையும், மருந்து பொருட்கள் வழங்கியதையும் அவர்கள் பிழை என்று கூறுகிறார்கள். இது பிழை என்றால் நான் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
இன்று மக்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்கி இருக்கின்றோம். அதனை அதிகரித்திருக்கின்றோம் இரண்டாம் கட்ட கொடுப்பனவு விரைவில் வழங்கப்படவுள்ளது அதுவும் அவர்களுக்கு கிடைக்கும். அரச சேவையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அதிகரிப்பை செய்திருக்கின்றோம் ஜனவரி மாதம் அவர்களுக்கு 25000 ரூபாய் அதிகரிக்க எண்ணியுள்ளோம். வங்குரோத்து அடைந்த நாட்டின் நிலையிலும் கூட சாதாரண அரசாங்கங்களினால் வழங்கப்படுகின்ற நிவாரணங்களிலும் பார்க்க அதிகப்படியான சலுகைகளை நாம் வழங்கி இருக்கிறோம். பொத்துவில் பிரதேசத்தை உல்லாச பயணிகளுக்கான ஒரு கேந்திர நிலையமாக மாற்ற திட்டம் திட்டியுள்ளோம். உல்லாச பயணிகள் இங்கு வந்தால் மக்களுடைய பக்கட்களில் ரூபாய்கள் வரும் ரூபாயின் பெறுமதியை நாம் உயர்த்த வேண்டும். என்று தெரிவித்தார்
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப், பொத்துவில் மாத்திரமல்ல அம்பாறை மாவட்டத்தில் தீர்க்கப்படாத பல பிரச்சனைகளை நான் ஜனாதிபதியின் உதவியோடு தீர்த்திருக்கின்றேன் என்று பேசிக் கொண்டிருந்த பொழுது ஜனாதிபதி கெட ஓயா அது ஓகே.. அது சரி அது நிறைவேற்றப்பட்டு விட்டது என்ற வாக்குறுதியை வழங்கினார். இதை கேட்ட மக்கள் ஆர்வத்துடன் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கைகளை அசைத்து பாராட்டுகளை தெரிவித்தார்கள்.