நற்பிட்டிமுனையில் வீசப்படும் மாட்டுக் கழிவுகள்! தமிழர் பிரதேசம் என்பதால்  கல்முனை மாநகர சபை புறக்கணிக்கிறதா? மக்கள் கேள்வி.

( வி.ரி. சகாதேவராஜா)  கல்முனை  மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டி முனை குளப்பகுதியில் தினமும் ஆடு மாடு மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்ற வீதம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தாளவெட்டுவான் சந்தியில் இருந்து நற்பிட்டிமுனை நோக்கி செல்லும் பழைய இ.மி.சபை வீதியின் இடப்பக்கமுள்ள குளக்கரையில் தினமும் இத்தகைய குப்பைகள் இனந்தெரியாதோரால் கொட்டப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.
 இதனால் அப்பகுதியில் உள்ள குடிமக்கள் வாழ முடியாதவாறா பெரிதும் அசௌகரியத்துக்கு உள்ளாகிஇருக்கின்றார்கள். அவர்களது குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது மாத்திரமல்லாமல் அந்த சூழல் பாதிக்கப்பட்டு மாசடைந்து கொண்டிருக்கின்றது.
 இதனை அப்பகுதி குடியிருப்பாளர்கள் பல தடவைகள் கல்முனை மாநரசபையிடமும் பொதுச் சுகாதார பரிசோதகரிடமும் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தமிழர் பிரதேசம் என்பதால் இந்த பாராமுகமா? புறக்கணிப்பா? என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
மற்றுமொரு குடியிருப்பாளர் திருமதி யாமினி நடராஜா இச்சீர்கேடு தொடர்பாக நேற்று புகார் தெரிவித்தார்.
 இப்படியான சூழலில் நேற்றும் கூட அங்கு மாட்டுக் கழிவுகள் ஆட்டு கழிவுகள் கோழிக்கழிவுகள் அங்கு கூடுதலாக வீசப்பட்டிருக்கின்றன.
 இது அந்த சூழலை மாசுபடுத்துவதோடு மக்களுக்கு நோய்களையும் உருவாக்கி வருகின்றது.
காகங்கள் அக் கழிவுகளை அக்கம் பக்கத்திலுள் குடியிருப்புகளில் குறிப்பாக கிணறுகளில் போடுகின்றன.நாய்களும் அசுத்தப்படுத்துகின்றன.
குப்பைகள் கொட்டுவதை தடுப்பதற்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்குமா என்று அந்த மக்கள்  எதிர்பார்க்கின்றார்கள்.