( வாஸ் கூஞ்ஞ) மன்னார் பாலத்திலிருந்து தள்ளாடி சந்திவரை இருமருங்கிலும் நிரந்தர கட்டிடம் அமைக்க இடைநிறுத்த தீர்மானம். மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் மறைமாவட்ட குடும்பநல மற்றும் பொதுநிலையினர் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட முறையீட்டைத் தொடர்ந்தே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் தீவின் நுழைவாயிலான பாலத்திலிருந்து தள்ளாடி சந்திவரை ஏ14 வீதிக்கு இருமருங்கிலுமுள்ள பிரதேசத்தை பாதுகாத்தல் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட குடும்பநல மற்றும் பொதுநிலையினர் ஆணைக்குழு 03.07.2024 அன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கிணங்க கடந்த 01.08.2024 அன்று மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்தக் கூட்டத்தில் மன்னார் பாலத்திலிருந்து தள்ளாடி சந்திவரை ஏ14 வீதிக்கு இருமருங்கிலுமுள்ள பிரதேசத்தில் தற்போது கட்டப்படும் நிரந்தரக் கட்டிட கட்டுமானத்தை இப்பிரதேசத்தின் முக்கியத்துவங்களை கருத்திற்கொண்டு இவற்றை வேறு இடத்திற்குமாற்றுதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக இதன் தொடர்ச்சியான இரண்டாவது கூட்டம் வியாழக்கிழமை (07) அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் பிற்பகல் இரண்டு மணிக்கு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள் , மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) , பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த வனவள இலாகா அதிகாரிகளும் இந்த கட்டுமான பணிகளுக்கு அனுசரனை வழங்கி வரும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளும் கட்டுமானப் பணிகளுக்கு சாதகமான கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
ஆனால் மன்னார் மக்கள் சார்பாக இதில் கலந்து கொண்ட மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் . மன்னார் மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குனர் அருட்பணி அகஸ்ரின் புஸ்பராஜ் அடிகளார் . மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் மற்றும் வாழ்வோதய இயக்குனர் அருட்பணி க.அன்ரலிற்றோ அருள்ராஜ் குரூஸ் அடிகளார் ஆகியோர் இக்கட்டுமானப் பணியினால் மன்னார் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை முன்வைத்திருந்தனர்.
இக்கூட்டத்தில் தற்பொழுது கட்டுமானப் பணிகளை உடன் நிறுத்த வேண்டும் என்றும் இந்த இடத்தில் நிரந்தர கட்டிடங்கள் அமையும் இடம் இல்லையெனவும் இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட வேண்டி இருப்பதாக தெரிவித்து இக்கூட்டம் நிறைவு பெற்றது.