பிரபல நகைக்கடை ஒன்றில் நகை திருடப்பட்டுள்ளதாக நகைக்கடை உரிமையாளர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த புதன்கிழமை (7) முறைப்பாடு செய்திருந்தார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளினியடி பௌசியா மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் கடந்த புதன்கிழமை (7) நகை திருடப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டுதலுக்கமைய பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது சம்மாந்துறை பெருங்குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் அம்பாறை பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (11) குறித்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரான அம்பாறை ஹிங்குரான பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணை திருடப்பட்ட நகைகளுடன் கைது செய்தனர்.
மேலும் குறித்த சந்தேக நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் தெரிந்தால் 0672 260 222 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கும்படி பொலிசார் பொதுமக்களின் கேட்டுள்ளனர்.
—