மன்னார் மருதமடு அன்னையின் பெருவிழாவுக்கு வருகை தருவோருக்கான அத்தியாவசிய தேவைகள் சிறந்த முறையில் அமைய போக்குவரத்து கட்டணம் குறைப்பு கட்டுப்பாட்டு விலைகளில் தரமான உணவு வகைகள் வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
மடு அன்னையின் ஆவணி 15ந் திகதி பெருவிழாவை முன்னிட்டு பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்களின் வருகையை ஏதிர்பார்த்து இதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்
மன்னார் யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு அன்னையின் வருடாந்த ஆவணி மாத உற்சவம் கடந்த 6ந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளாகிய இறுதிநாள் வழிபாட்டுக்கு என பெருந் தொகையான பக்தர்கள் வருகை தர இருப்பதால் இவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எல்லாத் திணைக்கங்களையும் உள்ளடக்கிய கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
இதனூடாக பொது மக்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பை பொறுத்தமட்டில் 500க்கு மேற்பட்ட பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து இங்கு வருகை தர இருக்கும் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அத்துடன் களவுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்துடன் வீதியோரங்களில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு காட்டு விலங்குகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இருந்தும் மடு ஆலய பகுதிகளிலுள்ள காட்டுப் பகுதிகளுக்குள் உள்நுழைய வேண்டாம் என்றும் பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம்.
மடு ஆலயப் பகுதி ஒரு புனித பூமியாக இருப்பதால் மது பானங்கள் மற்றும் புகைத்தல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுகின்றோம். இதற்கான கண்காணிப்புக்காக விஷேட பாதுகாப்பு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மடு ஆலயப் பகுதிக்கு வரும் மக்களுக்கு நியாயமான விலையில் தரமான உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதில் நுகர்வோர் பாதுகாப்பு சபையினர் பொலிசாருடன் இணைந்து கண்ணகாணிப்பில் ஈடுபடுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இதை மீறும் வர்த்தகர்களுக்கு மற்றும் குற்றம் விளைவிக்கின்றவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சுற்று நீதிமன்ற அமர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நியாயமான கட்டணத்தில் போக்குவரத்து செய்ய முச்சக்கர வண்டி . தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினருடன் கதைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இவ்வாறு மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.