மடு அன்னையின் பெருவிழாவுக்கு அழைப்பு!

பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மருதமடு அன்னையின் பெருவிழாவில் கலந்து கொள்ள இருந்தாலும் யாவரும் அச்சமின்றி வருகை தந்து மடு அன்னையின் ஆசீரை பெற்றுச் செல்ல அழைத்து நிற்கின்றோம் என மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் மன்னார் மறைமாவட்ட மருதமடு அன்னையின் ஆவணி மாதம் 15ந் திகதி பெருவிழா தொடர்பான வழிபாட்டு ஒழுங்குகள் தொடர்பாக தெரிவிக்கையில்

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் மடு அன்னையின் ஆவணி மாத பெருவிழாவுக்காக கடந்த 6ம் திகதி கொடியேற்றி திருவிழாவுக்கான ஆய்த்த நாளை தொடக்கி வைத்தார்.

அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு திருச் செபமாலையுடன் மாலை ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் இந்நாட்களில் காலையில் தமிழ் மொழியில் முதலாவது திருப்பலியும் 6.45 மணிக்கு சிங்கள் மொழியில் இரண்டாம் திருப்பலியும் இடம்பெறுகின்றன.

இந்த ஒன்பது நாட்களுக்குள் அடங்குகின்ற சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை 6 மணிக்கு தமிழிலிலும் காலை 7 மணிக்கு சிங்கள மொழியிலும் பகல் 11 மணிக்கு தமிழ் மற்றும் சிங்கள ஆகிய இரு மொழிகளிலும் திருப்பலிகளும் மாலையில் வழமையான வழிபாடுகள் இடம்பெறுகின்றன.

14ந் திகதி காலை திருப்பலிகளைத் தொடர்ந்து மாலையில் வெஸ்ப்பர்ஸ் ஆராதனை 6 மணிக்கு திருச் செபமாலையுடன் ஆரம்பமாகும்.

இதனைத் தொடர்ந்து சிறப்பான முறையில் திருவிழாவுக்கு வருகை தரும் ஆயர்களுடன் இணைந்து நூற்றுக்கணக்கான குருக்களும் துறவிகளும் இலட்சக்கணக்கான மக்களும் வெஸ்ப்பர்ஸ் ஆராதனையிலும் திருவிழாத் திருப்பலியிலும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

விஷேட விதமாக 15ந் திகதி காலை 5 மணிக்கு முதலாவது திருப்பலியும் காலை 6.15 மணிக்கு திருவிழாத் திருப்பலி சிலாபம் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய டொன் விமல்சிறி ஜெயசூரிய ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்படும்.

இத் திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சுரூப சுற்று பிரகாரமும் திருச்சுரூப ஆசீரும் இடம்பெறும்.

இத்திருவிழாவுக்கு இதுவரை ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து வீடுகளிலும் விடுதிகளிலும் தங்கி வழிபாடுகளில் கலந்து கொள்ளுகின்றனர்.

இதேவேளையில் இறுதி தினம் திருவிழாவின்போது பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

இதற்கான எல்லாவிதமான ஏற்பாடுகளையும் எமது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கொண்டுள்ளார். இவருடன் இணைந்து திணைக்கள அதிகாரிகளும் செயற்பட்டு வருகின்றனர்.

மக்களுக்கான சகலவித எற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அச்சமின்றி மடு அன்னையின் திருப்பதிக்கு வருகை தந்து அன்னையின் ஆசீரைப பெற்றுச் செல்லலாம் என அனைவரையும் அழைத்து நிற்கின்றோம் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் இவ்வாறு தெரிவித்தார்.