வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு.

(ரவ்பீக் பாயிஸ்)  சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு மாகாண ரீதியிலான பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்கத்தால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (06) திருகோணமலை ஊடக இல்லத்தில் இடம்பெற்றது.
இதன் போது கருத்து வெளியிடும்போதே இவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்துக்கு சர்வதேச விசாரணை  வழியாகவே நீதி வழங்க வேண்டும் என்பதை தொடர்ச்சியாக நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம். 2700 நாட்களை கடந்தும் தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாகவும் தெருவில் நின்று போராடி வருகின்றோம், எமக்கான தீர்வு இன்னமும் எட்டப்படாத நிலையில் நாம் இன்னமும் நிர்க்கதியாகிய நிலையிலேயே தொடர்ச்சியாக இருந்து வருகிறோம், என இதன் போது அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும்; அன்றைய நாளில் வடகிழக்கு மகாண ரீதியிலான ஒரு ஒட்டுமொத்த அழுத்தத்தினை அரசுக்கு வலியுறுத்தும் முகமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து பாரியதோர் போராட்டத்தினை தமிழக தாயகமான திருகோணமலையில் முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம் அதற்கான ஒத்துழைப்பை கிழக்கு மாகாண பொதுமக்களிடம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.
இதற்காக பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூகத்தினர், பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் என கிழக்கு மாகாண ரீதியிலான பொது மக்களது ஆதரவினையும் எதிர்பார்ப்பதாக இதன் போது கேட்டுக்கொண்டனர்
குறித்த செய்தியாளர் சந்திப்பில்
திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் தலைவி செபஸ்டியன் தேவி, மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமலராஜ் அமலனாயகி மற்றும் அம்பாறை மாவட்டத் தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோர் உடகங்களுக்கு கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.