(வாஸ் கூஞ்ஞ)
வட மாகாண பாடசாலைகளுக்கிடையில் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட மாணவர் ஆண்கள் அணிகளுக்கான கரபந்தாட்டப் போட்டியில் மன்னார் துள்ளுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணி சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டிருந்ததை முன்னிட்டு பாடசாலை சமூகமும் கிராம மக்களும் ஒன்றிணைந்து வீரர்களை கௌரவித்த நிகழ்வு இடம்பெற்றது.
வட மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டு 18 வயது ஆண்களுக்கான கரபந்தாட்டப் போட்டியானது சனிக்கிழமை (20) யாழ்ப்பாணம் ஆவரங்கால் நடராஜா இராமலிங்கம் வித்தியாலயத்தில் இறுதிப் போட்டி இடம்பெற்றபோது இறுதிப் போட்டியில் மன்னார் துள்ளுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர் அணியும் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி மாணவர் அணியும் இறுதிப் போட்டியில் மோதிக் கொண்டது.
இதன்போதே மன்னார் துள்ளுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர் அணி சாம்பியனாக தெரிவு செய்யப்படடிருந்தது.
இந்த அணியின் வீரர்களாக ஆர்.மரி அன்று . ஏ.ஆகாஷ் , என்.மரிய றுசிலன் , ஜே.யோசப் விஜய் , ஜே.ஜனிச சில்வா , எம்.றிஷான் மற்றும் ஜே.ஜெரோன் ஆகியோராவார்.
இந்த அணியினரை இவர்களின் பாடசாலை சமூகமும் மற்றும் அக் கிராமங்களின் மக்களும் இவர்களை கௌரவிக்கும் முகமாக துள்ளுக்குடியிருப்பிலிருந்து பேசாலை ஊடாக திறந்த வாகனத்தில் அழைத்து வரப்பட்டு பாடசாலை மண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் . மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் . மன்னார் உதவிக் கல்விப் பணிப்பாளர் (விளையாட்டு) பி.ஞானராஜ் மற்றும் பங்கு தந்தை அருட்பணி ஞானாதிக்கம் அடிகளார் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.