இறைவனும் புலவனும் தென்மோடி சிறுவர் கூத்தாற்றுகை

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாமாங்கத் தீர்த்தக்கரை பாராம்பரிய அரங்க ஆற்றுகையும் கண்காட்சியும் தொடர் நிகழ்வில் சிறுவர்களைக் கொண்டு ஆற்றுகை செய்யும் இறைவனும் புலவனும் தென்மோடிக் கூத்து 31.07.2024 மாலை அரங்கில் ஆற்றுகை செய்யப்படுகிறது.
இன்றைய நவீன கல்வி முறைமையும் அதன் கொள்கையாக்கமும் அறிவுபூர்வமான சமகால உலகிகயலுக்கு ஏற்ற மனிதர்களை உருவாக்குவதில் பின்னிக்கும் சூழலிலும் நாட்டிற்கும், சூழலுக்கும், வாழும் மனிதருக்கும், தேவைக்கும் அமைவாக மனிதர்களை உருவாக்கும் செயற்பாட்டில் கல்வி வழங்கப்படுகின்றதா? எனும் புரிதலில் காலனிய சித்தாந்தத்தின் பரவலாக்கம் அதன் பின்னுள்ள முதலாளித்துவப் பார்வை அனைத்தையும் இலாபம் ஈட்டும் செயற்பாடாகவும் உலக வர்த்தக விரிவாக்கத்தின் கூறாகவும் கொண்டு உலகை இயக்கும் தற்கால சூழலில், மனிதர்களையும், சூழலையும் கூடி இணைந்து, பகிர்ந்து, விட்டுக்கொடுத்து, மன வலிமையுள்ள ஆளுமைகளை உருவாக்கும் பலமான அரங்காகவும், சமகால அரங்கவெளிக்கு தேவையான பொதுமையான அரங்காகவும், காணப்படும் கூத்தரங்கு அதன் கட்டமைப்பில் சமூகத்தை வலுப்படுத்தக்கூடிய தன்மையானதாக அவதானிப்பை பெற்றுள்ள சூழலில் சிறுவர்களைக் கொண்டு ஆற்றுகை செய்யும் தென்மோடி கூத்தாக இக்கூத்து அமைகிறது.
புலவர் ஆரையூர் அருளம்பலம் அவர்களால் எழுதப்பெற்ற இக்கூத்து முனைக்காடு கலைஞர்களினால் இளம் அண்ணாவியாரான ந.சிவரெத்தினம் அவர்களினாலும் ஏட்டாசிரியர் ம.கேதீஸ்வரன் அவர்களினாலும் பழக்கபெற்று ஆற்றுகை செய்யப்படுகிறது. இதன் களரி முகாமையாளராக கி.மகேந்திரன் அவர்களும் பிற்பாட்டு சபையோராக ம.கந்தசாமி, செ.மேகநாதன், ம. குகநாதன் போன்றோர்களும் கூத்தர்களாக ரினோஜன், நிதர்சனன், பவிசாலினி, கவிசாணன், மிதுசாலினி, கோவர்த்தனன், சகிதன் போன்ற சிறுவர்கள் கட்டியக்காரன், அகத்தியர், செம்பகபாண்டியன், பூங்குழலி, சிவன், மீனாட்சி, பறையறைவோன், நக்கீரர், தருமி போன்ற பாத்திரங்களை ஏற்க்கின்றனர்.
தமிழ் வரலாற்றில் தொல்சீர் அரங்கு பற்றி பல விடயங்களை தந்துதவும் சங்க கால அகத்திணை மரபிலிருந்து “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” எனும் பாடலை அடிப்படையாக வைத்து இக்கூத்து கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் கதையமைப்பினை நோக்கும் போது செம்பக பாண்டியனின் மனைவி பூங்குழலியின் கூந்தலில் இருந்து வரும் புது வாசத்தின் காரணமாய் அமைவது இயற்கையானதா அல்லது செயற்கையானதா எனும் சந்தேகம் ஏற்பட சந்தேகத்தை தீர்க்க புலவர்கள் அமைந்த சபையில் போட்டியினை அறிவிக்கிறான். புலவர் தருமியின் மூலமாக சிவன் பாடல் புனைந்து பாண்டியன் சபைக்கு அனுப்புகிறார். நக்கீரர் பாடலின் பொருளைக் கேட்கும்போது தருமி பாடலின் கருத்தறியாது செல்கிறார் சிவனே நக்கீரரின் நாவண்மையை அறிய அரச சபைக்கு வருகை தந்து நக்கீரரோடு விவாதிக்கிறார். இறுதி வரைக்கும் இறைவனாக இருப்பினும் பிழை என்பதை சுட்டி காட்டுகிறார் நக்கீரர்.
குறிப்பாக அதிகாரப் பார்வையும் அவை கட்டமைக்கும் கொள்கைகளும் உலக நியதிகளாகவும், விதிகளாகவும், கோட்பாடாகவும் ஏற்றுக்கொள்ளும் அதிகார ஏற்பு மைய பரவலாக்கத்தில் இதற்கு எதிராக குரல் கொடுக்கவும் இறைவனாக இருப்பினும் “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என விவாதிக்கும் நக்கீரரின் அதிகாரத்துக்கான எதிர் வினை குரலை காட்டுகிறது இக்கூத்து.
வளமையாக பெரியவர்கள் தென்மோடி கூத்துக்களை பழகுவதில் கடினப்படுவது வழக்கம். ஏனெனில் தென்மோடிக் கூத்து பாடல்கள், ஆடல்கள் நுணுக்கமானவையாகவும் எல்லோராலும் எளிதில் பழக முடியாத தன்மையும் காணப்படும். ஆனால் சிறுவர்கள் இலகுவாக கூத்தினை ஆற்றுகை செய்யும் முறையினை இங்கு அவதானிக்க முடியும்.
இந்நிகழ்வின் அடுத்த கட்டமாக இரவு அரங்கில் நெல்லிச்சேனை கரவெட்டி கலைஞர்களால் பதினான்காம் போர் வடமோடிக் கூத்தும் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இ. குகநாதன் (பகுதி நேர விரிவுரை யாளர்)