( வாஸ் கூஞ்ஞ) மன்னார் தீவில் பேசாலை பகுதியில் ஆலயம் மற்றும் பொது மக்களின் காணிகளை அளப்பதற்கு மக்கள் அளக்க விடாது எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து நீதிமன்ற கட்டளையைப் பெற்று நிள அளவை செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் மக்கள் பதாதைகள் ஏந்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (26) பேசாலையில் இடம்பெற்றது.
இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது
மன்னார் தீவில் காற்றாலை அமைப்பதற்கும் மற்றும் கனியவள மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கும் எதிராக மன்னார் தீவு மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் காலத்துக்கு காலம் தங்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பேசாலை பகுதியில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைப்தற்கான முன்னெடுப்பு தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக மின் காற்றாலைகள் அமைப்பதற்கான காணிகள் அளக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.
வியாழக்கிழமை (25) பேசாலையில் ஆலயத்துக்கும் பொது மக்களுக்கும் சொந்தமான காணிகளை அடாத்தாக அளக்க முற்பட்டபோது அன்றையத் தினம் மக்கள் அவ்விடத்தில் ஒன்று திரண்டு நிள அளவை செய்ய விடாது தடுத்தனர்.
இதைத் தொடர்ந்து நீதிமன்ற கட்டளையைப் பெற்றுக் கொண்டு பலத்த பாதுகாப்புகளுடன் வெள்ளிக்கிழமை (26) பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்துக்கும் மற்றும் பொது மக்களின் காணிகளும் தற்பொழுது மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அளக்கும் பணி இடம்பெற்று வருகின்றது.
இதைக் கண்டித்து இன்றையத் தினம் (26) பேசாலையில் மக்கள் பதாதைகளை ஏந்தியவாறு தங்கள் எதிப்புக்களை தெரிவித்தனர்.
இவர்கள் ஏந்தியிருந்த பதாதைகளில் ‘70000 மக்களை மன்னார் தீவிலிருந்து வெளியேற்றும் திட்டமா?’ ‘நாட்டின் அபிவிருத்தி என்று கூறி மன்னார் தீவை அழிப்பதா?’ ‘எமது பாரம்பரிய காணிகளை அபகரிக்காதே வெளியேறு’ ‘நீரோடைகளை அடைத்து டெங்கு வளர்பதும் அபிவிருத்தியா?’ போன்ற வாசகங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் பேசாலை கடைத் தெருவில் நின்று தங்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.