அரச அதிபர் கே.கனகேஸ்வரன்.
( வாஸ் கூஞ்ஞ)
மன்னாரிலுள்ள அரச காணிகளின் விபரங்களை ஜனாதிபதி கேட்டுள்ளமையால் அவைகள் ஜனாதிபதிக்கு இன்று (22) அனுப்பி வைக்கப்பட இருக்கின்றது. இதில் உங்கள் பிரச்சனையான இலுப்பைக்கடவை சோழமண்டல அரச காணி சம்பந்தமாகவும் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
இலுப்பைக்கடவை சோழமண்டல அரச காணியில் பணம் படைத்தவரும் வெளிநாட்டவரும் அத்துமீறிய செயல்பாட்டைக் கண்டித்து மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக திங்கள் கிழமை (22) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள்;. இது தொடர்பாக அரச அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்து அரச அதிபருடன் உரையாடியபோதே அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்
நான் அரசாங்க அதிபராக பொறுப்பேற்ற பின் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஒரு விடயமாக இந்த காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு கீழுள்ள காணி (எல்ஆர்சீ) தொடர்பாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கவனத்தில் எடுக்கப்படடிருந்த பொழுது பொது மக்களாலும் குறிப்பிடப்பட்டிருந்த மேட்டு நிலக் காணிகள் கைப்பற்றப்பட்டுள்ளதால் அவற்றையும் கணக்கிடப்பட்டே இங்கு அரசக் காணிகளின் கணக்கீடு செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலமை மன்னார் மாவட்டத்தில் பரவலாக காணப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தில் பலர் காணிகள் அற்ற நிலையில் காணப்படுகின்றனர்.
இவைகளை மீளப்பெற்று இவ்வாறானவர்களுக்கு இக்காணிகளை பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நிலமையும் உண்டு.
இது தொடர்பாக நாங்கள் கூடுதலான கவனத்தை எடுத்து வருகின்றோம். கடந்த மாதம் எமது மேன்மை தங்கிய ஜனாதிபதி மன்னாருக்கு வந்தபொழுது நீங்கள் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை கவனத்திற்கு கொண்டு வந்தபொழுது இது தொடர்பான அறிக்கையை அனுப்பும்படி எங்களை பணித்துள்ளார்.
இதற்கான அறிக்கையை நாங்கள் இன்றையத் தினம் (22) அவருக்கு அனுப்புவதற்காக இருக்கின்றோம். மன்னாரில் பலர் காணியற்ற நிலையில் இருக்கும்போது வெளியிலிருந்து பணம் படைத்தவர்கள் வந்து இக்காணிகளை கையடக்கி மேலும் அவர்கள் பணம் படைத்தவர்களாக இருக்க முயலுகின்றனர்.
இதை தொடரவிட முடியாது. இக்காணிகளை காணியற்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் நடவடிக்கையாகவே அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் செயற்படுகின்றோம்.
ஆகவே இப்பொழுது நீங்கள் முன்வைத்திருக்கும் உங்கள் காணி பிரச்சனைகளை உரிய இடங்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உங்களுக்கு சாதகமான ஒரு நடவடிக்கையை நாங்கள் எடுக்க முயலுவோம் என இவ்வாறு தெரிவித்தார்.