(ஏறாவூர் நிருபர் நாஸர்)வடிசாராயம் குடித்துக்கொண்டு புகையிரத பாதையில் இருந்த இளம் குடும்பஸ்தர்மீது புகையிரதம் மோதியதில் உடல் சிதறிப்பலியாகிய சம்பவமொன்று மட்டக்களப்பு – வந்தாறுமூலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் 23.07.2024 அதிகாலை 2 மணியளவில் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச்சேர்ந்த 3 வயதுக் குழந்தையின் தந்தையான 29 வயதுடைய பாக்கியராசா பிரசாந்தன் என்பவரெ உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வந்துகொண்டிருந்த எண்ணைக்கோச்சி இவர்மீது மோதியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தையடுத்து மட்டக்களப்பிலிருந்து அதிகாலை புறப்பட்ட பிரயாணிகள் புகைவண்டி வந்தாறுமூலையில் நிறுத்தப்பட்டதுடன் கொழும்பிலிருந்து வந்த கடுகதி புகைவண்டி வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் இடைநிறுத்தப்பட்டது. மரண விசாணை நடைபெற்றதையடுத்து சுமார் நான்கு மணித்தியாலத்தின் பின்னரே அப்பதையில் புகையிரதங்கள் பயணித்தன.
மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியிலுள்ள அவரது தாயின் வீட்டிற்கு வந்திருந்தவேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துண்டுதுண்டாகச் சிதறிய உடலை அவரது குடும்ப உறவினர்கள் அடையாளங்காட்டிதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நசிர் சம்பவ இடத்திற்குச்சென்று பார்வையிட்டு முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தார். உடற்பாகங்கள் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.