( வாஸ் கூஞ்ஞ) தமிழர்களின் பாரம்பரியப் பண்;டிகைகளில் ஒன்றான ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் மடு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட தம்பனைக்குளம் கிராமத்தில் புதன்கிழமை காலை 8 மணிமுதல் மிகவும் சிறப்புற நடைபெற்றது
வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள தம்பனைக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலயத்தில் மடு பிரதேச செயலாளர் கீ. பீட் நிஜாகரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையிலும் வழிப்படுத்தலிலும் மடு பிரதேச செயலகம் இந்த விழாவை ஒழுங்கு செய்திருந்தது
ஆரம்ப நிகழ்வாக ஆடிப்பிறப்பு பண்டிகையை அறிமுகம் செய்து வைத்த யாழ்ப்பாணம் நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் திருவுருவப்படத்திற்கு மடு பிரதேச செயலாளர் கீ. பீட் நிஜாகரன் மலர் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்கள் மலர் வணக்கம் செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து ‘ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை’ என்ற பாடலை தம்பனைக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் இசைத்தனர்.
அடுத்து மடு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் திரு மனோகராசா பிரதீபன் ‘ஆடிப்பிறப்பும் தமிழர் பாரம்பரியமும்’ என்ற தலைப்பில் விசேட சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து தம்பனைக்குளம் அ.த.க.பாடசாலை மாணவர்கள் மற்றும் தம்பனைக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நடனம் , பேச்சு , கவிதை மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது கலை நிகழ்வுகளை வழங்கிய மாணவர்கள் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் பாரம்பரிய முறைப்படி சிரட்டைகளில் ஆடிக்கூழ் மற்றும் கொளுக்கட்டை என்பன வழங்கப்பட்டன.
சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் இந்த நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியாக நெறிப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.