தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அம்பாள் ஆலயமகளிர் இல்லத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சர்வதேச இந்து மத பீடச் செயலாளரும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பாளருமான கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கோரிக்கை விடுத்துள்ளார் .
அரச உயரதிகாரிகள் ஒரு சிலரும் ஊடகங்கள் சிலவும் இணைந்து முன்னெடுத்த செயற்பாடுகள் இலங்கை வாழ் சைவ இந்து மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையையும் மனவருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன் இச் செயற்பாடுகள் தனிப்பட்ட பழிவாங்கல் மற்றும் ஒரு மதத்தின் வளர்சியை மழுங்கடிக்கும் திட்டமிட்ட செயற்பாடாகவே நோக்கப்படுகின்றது, என சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளரும், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஒருங்கிணைப்பாளர் கலாநிதி. இராமச்சந்திரக் குருக்கள் பாபுசர்மா ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதுடன் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அம்பாள் ஆலயமகளிர் இல்லத்திற்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடுகளை உடன்நிறுத்தி, பக்கச்சார்பற்ற விதத்தில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் முழு விபரம் வருமாறு.
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
அதிமேதகு ஜனாதிபதி அவர்கட்கு,
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அம்பாள் ஆலயமகளிர் இல்லத்திற்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்தக்கோரல்
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அம்பாள் ஆலயமகளிர் இல்லத்திற்கு எதிராக அரச உயரதிகாரிகளும் ஊடகங்கள் சிலவும் இணைந்து முன்னெடுத்த செயற்பாடுகள் இலங்கை வாழ் சைவ இந்து மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையையும் மனவருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன் இச் செயற்பாடுகள் தனிப்பட்ட பழிவாங்கல் மற்றும் ஒரு மதத்தின் வளர்சியை மழுங்கடிக்கும் திட்டமிட்ட செயற்பாடாகவே நோக்கப்படுகின்றது.
பேச்சுச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளாயினும், அதுவே பிறரது சுதந்திரத்திற்குப் பாதகம் தருவதாக இருந்தால் அதனை எவரும் ஏற்கமாட்டார்கள். மத நல்லிணக்கம் என்பது ஒரு நாட்டின் ஆரோக்கியமான சூழலுக்கும் முன்னேற்றகாரமான எதிர்காலம் நோக்கிய பயணத்திற்கும் அவசியமானதொன்று. இச் செயற்பாட்டில் நாட்டின் அரசியல் வாதிகளினதும் அரச அதிகாரிகளினதும் செயற்பாடுகள் காத்திரமிக்கவை. அத்தகைய பொறுப்பு வாய்ந்தவர்களின் பிழையான கருத்துகள் மற்றும் பக்கச் சார்பான செயற்பாடுகள் மத நல்லிணக்கத்திற்கும் மத சுதேசிகளுக்கும் பங்கம் விளைவிப்பதாக அமைந்துவிடும்.
மத ரீதியாகப் பிறர் செய்கின்ற நல்ல காரியங்களுக்குச் சேறுபூசுவதும் அதற்கு ஊடகங்கள் துணை போவதும் பிழையான கருத்துகள் தவறான விதத்தில் சமூகத்தில் பரப்பப்படுவதும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தவைக்கும்.
எமது தேசத்தில் சக மதங்களைக் கேலி செய்யும் போக்குகள் கண்டிக்கப்படாமல் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் நிலை கேட்பாரற்றதாகிவிட்டது. இத்தகைய மத நிந்தனைப் பேச்சுக்களுக்கு எதிரான பாரபட்சம் அற்ற கடுமையான சட்டம் அமுலாக்கப்பட வேண்டும்.
மதரீதியாக, உண்மைத் தன்மையோடு நியாயபூர்வமாகச் செயற்படும் சமூக சேவையாளர்களுக்கும் அவர்கள் தம் சேவைகளுக்கும் ஊடகங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் அபகீர்த்தியான செயற்பாடுகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
மக்களின் இன மத உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படும் ஊடகங்கள் தடைசெய்யப்படவேண்டும்.
இத்தகைய நிலையில் நாம் எமது சைவ மக்கள் சார்பாக, இந்த நாட்டில் சைவசமய செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் கடந்த வாரம், யாழ்பாணம், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அம்பாள் ஆலயமகளிர் இல்லத்திற்கு எதிராக அரச உயரதிகாரிகளும் ஊடகங்கள் சிலவும் இணைந்து முன்னெடுத்த செயற்பாடுகளை உடன்நிறுத்தி, பக்கச்சார்பற்ற விதத்தில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தயவோடு கேட்டுக்கொள்கிறோம்.
என்றவாறு குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.