தன்னை மையமாக வைத்து வாழாது மற்றவர்களை மையமாக வைத்து வாழுங்கள். யாழ் ஆயர் ஞானப்பிரகாசம் ஆண்டகை.

( வாஸ் கூஞ்ஞ) அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களை மையமாக வைத்து அரசியல் செய்யாது தங்களை மையமாக வைத்து வைழ்ந்தமையாலேயே நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வந்துள்ளது. அன்னை மரியாளிடம் இருந்த பண்புகள் எம்மிடம் இருக்குமாகில் நாம் இன்புற்று இருப்போம் என யாழ் ஆயர் மேதகு யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி பெருவிழாவும் இத்துடன் மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்ட நூற்றாண்டு பெருவிழாவும் செவ்வாய்கிழமை (02) நடைபெற்ற கூட்டத்திருப்பலியின்போது யாழ் ஆயர் மேதகு யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தனது மறையுரையில் மேலும் தெரிவிக்கையில்

என்னைப்பற்றிய வாழ்வு மற்றவர்களைப்பற்றிய சிந்தனையல்ல. எம் வாழ்விலே நான்தான் மையம்.. மற்றவர்கள் மையமாக வைத்து நாம் வாழ்வதில்லை. இவ்வாறு அனுபவங்களை எம் வாழ்வில் கண்டு வருகின்றோம்.

இன்று நாம் மடு அன்னையின் முடி சூட்டு விழாவின் நூறாவது ஆண்டை நினைவு கூறும்போது நாம் அவவிடமிருந்து கற்றுக் கொள்வதில் முதலாவது அவள் தன்னை மையப்படுத்தி வாழவில்லை.

அவள் மற்றவர்களை மையப்படுத்தியே வாழ்ந்தாள். மீட்பரை தான்தான் பெற்றெடுத்து மற்றவர்களுக்காக கொடுக்க வேண்டும் என்று மற்றவர்களை மையமாக வைத்துத்தான் ‘இதோ உமது அடிமை உமது வார்த்தையின்படி எனக்கு ஆகட்டும்’ என்று சொல்லி தன்னை அர்ப்பணிக்கின்றாள்.

தனக்கு வரப்போகும் துன்பங்களை அவள் யோசிக்கவில்லை. அவள் தன்னை மையப்படுத்தவில்லை. மாறாக அவள் மற்றவர்களை மையப்படுத்தியே செயற்பட்டாள்.

இவற்றை நாம் மரியாளின் வாழ்க்கை முழுதும் காண்கின்றோம். எதை எடுத்தாளும் அவள் தன்னை மையப்படுத்தியே வாழ்ந்தாள்.

எலிசபேத்தம்மாள் முதிர்ந்த வயதில் கருத்தரித்து உள்ளாள் என்று உணர்ந்த மரியாள் தான் கருத்தரித்திருந்ததை பொருட்படுத்தாது எலிசபேத்தம்மாளுக்கு உதவிபுரிய வேண்டும் என்று புறப்பட்டு மூன்று மாதங்கள் அங்கு பணிவிடை செய்தாள். இங்கும் தன்னை மையப்படுத்தாது பிறருக்காக அவர்களை மையப்படுத்தி வாழ்வதைக் காண்கின்றோம்.

கானாவூர் திருமண விழாவில் அந்த திருமண வீட்டில் இரசம் தீர்ந்து போகின்றது விருந்துக்கு அழைத்தவன் கஷ்டப்பட போகின்றான் என்று உணர்ந்த மரியாள் தனது மகன் இயேசுவிடம் இதை சுட்டிக்காட்டி பிரச்சனையை திர்த்து வைப்பதன் மூலம் பிறரை மையப்படுத்தி அங்கு செயல்படுவதை நாம் காண்கின்றோம்.

இதைத்தான் நாம் எம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது ஒன்றாகும். நாம் இந்த அன்னைக்கு பல நாமங்களைச் சூட்டி நாம் வாழ்கின்றபோது இது எமக்கு படிப்பிப்பது மரியாள் தன்னை மையப்படுத்தவில்லை. பிறரையே மையப்படுத்தி அவள் வாழ்ந்துள்ளாள் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

ஆனால் இன்று நாம் காண்பது என்ன? நான் மட்டும் நல்லாக இருந்தால் போதும் என்பதே ஆகும். இது நாட்டுத் தலைவர்களிடமும் இருக்கின்றது. இவர்கள் நாட்டை சுரண்டிக் கொண்டு போய் விட்டார்கள். இவர்கள் தன்னைப்பற்றியே சிந்தித்து வாழ்ந்தார்கள்யொழிய நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை.

இதைத்தான் நாம் எல்லா இடங்களிலும் காண்கின்றோம். வேலைத் தளங்களில் அவர்கள் உற்சாகத்துடன் வேலை செய்வதில்லை. தங்கள் எதிர்காலம் நல்லாக இருந்தால் மட்டும் போதும் என்று வாழ்கின்றார்கள்.

இவ்வாறுதான் எமது வாழ்க்கை செல்லுகின்றது. மற்றவர்களை மையப்படுத்தி வாழ்வதுதான் கிறிஸ்தவம். இதுதான் எமக்கு இன்பத்தை தரும்.

மரியாள் தன்னை மையப்படுத்தி வாழாது இருந்தமையாலேயே இன்று அவள் இறைவனின் தாயாக போற்றப்படுகின்றாள்.

மரியாளிடம் இருந்த இன்னொரு பண்பு பிரமாணிக்கம். ‘ஆகட்டும்’ என்று சொன்னவள் கடைசி வரைக்கும் இன்பங்கள் , துன்பங்கள் , தனது கணவர் சந்தேகம் கொண்டார் , இடம்பெயர்வு , அழிவுகள் யாவற்றையும் சந்தித்தவள் கடைசி வரைக்கும் பிரமாணிக்கமாக இருந்தாள்.

ஆனால் திருமண வேளையில் எம்மவர்கள் வாக்குறுதி கொடுப்பார்கள் இன்பத்திலும் துன்பத்திலும் நோயிலும் நான் இவருக்கு பிரமாணிக்கமாக இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்து திருமணம் முடித்து விட்டு ஒரு சில மாதங்களுக்குள் விவாக ரத்து செய்து கொள்வதை இப்பொழுது கண்டு வருகின்றோம்.

இன்று தன்னை மையப்படுத்தி வாழ்வதால் அதிகமான திருமணங்கள் விவாக ரத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

பிரமாணிக்கமற்ற தன்மையை இன்று பல இடங்களில் காண்கின்றோம். பாடசாலை வகுப்பில் ஆசிரியர்கள் சரியான முறையில் கற்பிக்காது ரியூசன் வகுப்பிலேயே கவனம் செலுத்துகின்றனர். மாணவர்களை மையப்படுத்தி படுப்பியுங்கள் என்று சொல்லப்பட்டது இவர்களின் மண்டையில் ஏறுவதில்லை.

அத்துடன் பிரமாணிக்கமற்றத் தன்மை துறவற வாழ்க்கையிலும் ஊறியுள்ளது. எங்கோ தேடி காரணங்கள் சொல்லி தாங்கள் செய்வது சரியென்று சொல்கின்றனர். இவர்களுடைய காரணங்களை நோக்கும்போது இவர்கள் தங்களை யைப்படுத்தியே சொல்லுகின்றார்கள் என்பது புரிகின்றது.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் மரியாளைப் போன்று பிரமாணிக்கம் உள்ளவர்களாக வாழ முற்பட வேண்டும். இதைத்தான் மரியாளும் நம்மிடம் கேட்பது நிங்களும் மற்றவர்களை மையப்படுத்தி வாழுங்கள் நீங்கள் இன்புற்று இருப்பீர்கள் என அன்னை சொல்லுகின்றாhள் என இவ்வாறு தனது மறையுரையில் யாழ் ஆயர் மேதகு யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

(வாஸ் கூஞ்ஞ)