அரசியல் கூட்டுக்குள் சங்கமம் ஆகினார்கள் சிவில் பிரமுகர்கள்! பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன்.

( வாஸ் கூஞ்ஞ) அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்திப் பலர் பகல் கனவு காண்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வயோதிப முடக்கத்தால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் அரசியலில் – அதிலும் தேர்தல் அரசியலில் – வெற்றிடத்தையே ஏற்படுத்தியிருக்கின்றார். இந்த நிலையில் அரசியல் கூட்டுக்குள் சங்கமம் ஆகினார்கள் சிவில் பிரமுகர்கள் என்கிறார் மன்னார் மாவட்டம் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன்

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் மேலும் தெரிவித்திருப்பதாவது

வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் எனும் உரையாடல் யாராலோ தொடங்கப்பட்டு எங்ககோ போய் நிற்கிறது . இனி என்ன வடிவமெடுக்குமோ என்பதை யார் அறிவார்…?

கடந்த 70 ஆண்டுகளாக பல சக்கடத்தார்கள் பதம் பார்த்து விழுந்த வரலாறுகள் உண்டு. அதில் புலிகள் மட்டும் விதிவிலக்கு. 2009க்குப் பின்னர் பல்வேறு விதமான குழப்பங்களும் முதிர்ச்சியற்ற அரசியல் செயல்பாடுகளும் அரங்கேறுகின்றன. எதுவும் நின்றுஇ நிதானிக்கக் கூடியதாகத் தோன்றவில்லை. அதற்கு அடிப்படைக் காரணம் வலிமையான – நம்பகத்தன்மையான – தலைமைத்துவம் இன்மையே.

அந்த அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்திப் பலர் பகல் கனவு காண்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வயோதிப முடக்கத்தால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் அரசியலில் – அதிலும் தேர்தல் அரசியலில் – வெற்றிடத்தையே ஏற்படுத்தியிருக்கின்றார்.

அதைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் உள்ளகத் தேர்தல் விடயமும்இ நீதிமன்ற விவகாரமும் மேலும் தமிழர் அரசியலை பலவீனப்படுத்துவன்வாகவே அமைந்திருக்கின்றன.

இதை யதார்த்தமாகவோஇ அறிவு பூர்வமாகவோ புரிந்து கொண்டு தமிழ் மக்களின் எதிர்கால இருப்பை வலிமையாக நிர்ணயிக்கும் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு முனைந்திருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்திருக்க வேண்டும். இல்லையேல் வல்லாளர்கள் ஒன்று சேர்ந்து புதிய கட்சியை வெளிப்படை தன்மையோடு உருவாக்கி இருக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்யவில்லை. தமிழர்களின் தற்போதைய பாரிய பிரச்சினையாகிய காணிப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு சட்டப் பொறிமுறையை உருவாக்கி இருக்கலாம். அல்லது தமிழர்களை ஒரு தேசமாக திரளக் கூடிய ஒரு செயல்பாட்டு அமைப்பை உருவாக்கி இருக்கலாம்.

இதில் எதையும் முன்னெடுக்காமல் – கள நிலைவரத்தைப் புரிந்து கொள்ளாமல் – செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்தவர்கள் போல் தற்போது நடைமுறை சாத்தியமற்ற வேலையில் மூர்க்கத்தனமாக முனைப்பு காட்டி வருகிறார்கள்.

மூலோபாய சித்தாந்தத்தினைக் கட்டமைப்பதில் எவ்வாறான உயரிய நிலையியல் கரிசனை கொள்ள வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பொறுப்பேற்றல்இ பொறுப்புக் கூறுதல்இ அதை பகிர்ந்து நம்பகத்தை ஏற்படுத்துதல் – இவற்றில் பாரிய பொறுப்புடைமை பாத்திரம் வகித்தல் அவசியம்.

அதைச் செய்வார்களா இந்த சிவில் பிரமுகர்கள்? இதில் உள்ள கட்சிகள் கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் மக்களின் உரிமை சார்ந்து எத்தனை போராட்டம் நடத்தினார்கள்? எத்தனை மக்கள் சந்திப்புக்களை ஏற்படுத்தி உள்ளார்கள்? அல்லது சிவில் சமூகம் எனக் கூறுபவர்கள் அல்லது இவர்களிடம் உள்ள அமைப்புக்கள் எத்தனை ஜனநாயக போராட்டங்களை நடத்தின? இதில் முன் நிற்கும் சிவில் பிரமுகர்கள் இந்த விடயங்களை முன்னெடுத்தார்களா? அல்லது ஓர் செயலூக்கமுள்ள அமைப்பில் கூட அங்கத்தவர்களாக உள்ளார்களா?

இருந்திருந்தால் கடந்த காலத்தில் பல போராட்டங்களை முன்னெடுத்து அனுபவசாலிகளாக மிளிர்ந்திருப்பார்கள். இதில் தமிழ் தேசிய பசுமை இயக்கம் மாத்திரம் யாழில் சில விடயங்களை முன்னெடுத்திருந்தது.

இதில் ‘லெட்டர் பேட்’ கட்சிகளே அதிகம். அதிலும் ரெலோஇ புளோட்இ ஜனநாயக போராளிகள் கட்சி இந்த மூன்றும் இறுதிவரை களத்திற்கு வருவார்களா என்பதில் வாய்ப்பு மிகவும் குறைவு.

யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளரை ஆதரிக்கும் நிலை தோன்றலாம். விக்னேஸ்வரன்இ சுரேஷ் பிரேமச்சந்திரன் இருவருக்கும் இடையிலே எந்தக் கட்சியிலே பொது வேட்பாளரை நிறுத்துவது என்பதிலே முரண்பாடு தோன்றலாம்.

அதுஇ இலகுவில் தீர்க்கக் கூடிய விடயமாக முடியப் போவதில்லை. ஏனெனில் அந்தச் சின்னம் பிரபலமாகினால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு உபயோகமாக அமையும் என இரண்டு தரப்பினரும் முனைப்புக் காட்டலாம். அதில் விடாக்கண்டன் கொடாக்கண்டன் நிலையே தோன்றலாம்.

அனந்தி சசிதரன் அல்லது சிவாஜிலிங்கம் இருவரில் ஒருவர் பொது வேட்பாளர் கடந்துஇ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடிய ஏது நிலை தோன்றலாம.

இதில் மீதமாக ஐங்கரநேசனும் ஸ்ரீகாந்தாவும்இ விக்னேஸ்வரன் அல்லது சுரேஷ் பிரேமச்சந்திரனும் தான் மிஞ்சப் போகிறார்கள். ஆகவே தமிழ்ப் பொது வேட்பாளர் எப்படி சாத்தியப்பட போகிறதுஇ இவர்களின் எஜமானாகிய டெல்லி இவர்களை எப்படி வழிநடத்த போகிறது என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.

‘எமனுக்கு இரும்பைக் கொடுத்தவர்கள்’ என்று ஒரு கிராமத்து பழமொழி உண்டு. அந்த இரும்பைக் கூட இயமனிடமிருந்து பிடுங்கி எடுப்பதற்கு தந்திரம் தெரிந்தவர்கள்தான் இந்த தமிழ் அரசியல்வாதிகள். சந்தர்ப்பங்கள் புரிய வைத்திருக்கின்றன.

சிவில் பிரமுகர்கள் என்னும் நிலையை இவர்கள் இழந்து விட்டனர். தேர்தல் அரசியலை சிவில் சமூகம் முன்னெடுக்க முடியாது. அது அரசியல் கட்சிகளால்தான் முடியும்.

ஆகவே அரசியல் செய்வது வேறு. அரசியல்வாதி வேறு. அரிசியில் இருந்து அரப்பு வரைக்கும் அரசியல்தான். சிவில் சமூகங்களுக்கு என்று ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையை மீறினால் தங்கள் சுயத்தையும் சார்பின்மையையும் அவர்களாகவே இழந்து விடுவார்கள் என்பது இயற்கை விதிக் கோட்பாடு.

உலகளாவிய சிவில் சமூகங்கள் தத்தமது இனக்குழுமங்களுக்கு உரிமை சார்ந்து செயல்படுவது என்பது வழமைதான். ஆனால் அவர்கள் தேர்தல் அரசியலை முன்னெடுப்பதில்லை.

டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே நடாத்திய போராட்டம் பா.ஜ.கவை ஆட்சிக்கு கொண்டு வர உதவியது. அரபுலகப் புரட்சியிலும் ஏகாதிபத்திய அரசியல் இருந்தது.

விவசாய சட்டத்திற்கு எதிரான டெல்லியில் நடந்த தொடர் போராட்டத்தின் பின்னே ஆம் ஆத்மி கட்சி இருந்தது. அதனால் அந்தக் கட்சி பஞ்சாபில் ஆட்சியையும் கைப்பற்றியது. ‘

கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டம் பெயரளவில் சிவில் அமைப்புகளாக இருந்தாலும் அதை அரசியல் கட்சிகளே வழிநடத்தின. குறிப்பாக இலங்கையிலே அதிக தொழிற்சங்கங்களை வழிநடத்தும் ஜே.வி.பியே அதன் பின்னணியாக அதிகம் செயல்பட்டது.

அதிகாரப் பசி என்பதைவிட வயிற்று பசிக்கான வாழ்வியல் போராட்டம் என்பதால் இலகுவாக அது மக்கள் மயமானது. ஆகவே எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு பின்னணி உண்டு.

அரசியல் என்பது வெளியே தெரியும் மிதப்புக்களை வைத்து தீர்மானிப்பது அல்ல. அடியில் மறைந்திருக்கும் ஈயத்தையும் கவனிக்க வேண்டும்.

இந்த பொது வேட்பாளர் முறைமையை பொது வாக்கெடுப்பாக மாற்றி இருந்தால் மக்கள் ஏகோபித்து ஆதரவை நல்கி இருப்பார்கள். அது ஒரு கோட்பாட்டு ரீதியான தீர்மானமாக மாறும்.

வடகிழக்கில் உள்ள தமிழ்த் தேசிய கட்சிகளை சாராதவர்கள் கூட இதற்கு வாக்களித்து அந்தக் கோட்பாட்டை வெற்றி பெறச் செய்திருப்பார்கள். தேர்தல் என்று வரும் பொழுது கோட்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்காதுஇ கட்சிகளே முக்கியத்துவம் பெறும் என்பதே கடந்த கால பட்டறிவு. கள யதார்த்த அனுபவம். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்விடயத்தைத் தமிழரசுக. கட்சியும் ஆதரித்து இருந்தாலும் கூடஇ மக்கள் மத்தியிலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அரசியல் தீர்மானங்கள் இருப்பதனால் இலக்கை நிறைவு படுத்துவது எட்டாக் கனியாகவே மாறி இருக்கும்.

இவர்கள் தாங்கள் தீர்மானித்து விட்டால் தமிழ் மக்கள் வாக்கு போடுவார்கள் என எதன் அடிப்படையில் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. இதில் உள்ள கட்சிகளுக்கு வடக்குஇ கிழக்கில் எங்கும் ஒழுங்கான கிளைகள் இல்லை. சிவில் அமைப்புகள் கூட வலிமையான கட்டமைப்போடு எந்த ஓர் அமைப்பும் இல்லை. எல்லோரும் கனவு காணலாம். அது கனவாகவே போய் விடக் கூடாது.

அதி தீவிர களப்பணி இல்லாமல் இலக்குகளை நிர்ணயிப்பது என்பது கடலில் மழை பெய்வதற்கு ஒப்பானது. இதைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையே. அல்லது புரிந்தும் புரியாதது போல் இருக்கிறார்களா எனும் சந்தேகமும் எழுகிறது.

இவர்களால் சூட்டப்பட்டிருக்கும் புதிய அரசியல் கூட்டின் ‘தமிழ்த் தேசியப் பேரவை’ என்பது 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில. ஒலித்தது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சில சமூக அமைப்புகளை இணைத்து ‘தமிழ் தேசியப் பேரவை’ என பெயர் சூட்டி தேர்தலை எதிர்கொண்டது. பதிவில் இல்லாத போதும் கூட ஒரு கட்சி பயன்படுத்திய பெயரை அவர்கள் ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்துவது அறத்துக்கு தகுமா எனும் சமூக நீதிக் கேள்வி எழுகிறது.

மூத்த ஊடகவியலாளர் அரசியலுக்கு வந்து தனது ஊடக ஜாம்பவான் எனும் உயரிய நிலையை விமர்சனத்திற்கு உட்படுத்தியது போல் இந்த பத்தி எழுத்தாளர்களும் இனி யதார்த்தமாக அவர்களது எழுத்துக்களை பலரும் நோக்க முடியாத நிலை தோன்றலாம்.

ஏனெனில் அரசியல் சாயம் இவர்களை இயல்பாகவே மகுடம் சூடிக் கொள்ளும் போது அது இவர்களின் எதிர்கால கருத்தியல் செயற்பாட்டுக்கு பெரும் சவாலாகவே அமையும். இவ்வாறான பரிதாபமான நிலை அவர்களுக்கு ஏற்படப் போகிறது.

ஆகவே இந்த கெமிஸ்ட்ரி இல்லாத முயற்சி எங்கே போய் முடியப் போகிறதோ…? அரசியலில் கணக்குகள் கூட்டல்இ பெருக்கல் மட்டுமல்ல கழித்தலும் உண்டு. பழித்தலும் உண்டு. மழித்தலும் உண்டு. இதில் இவர்கள் நிலை எதுவோ….? என இவ்வாறு தெரிவித்துள்ளார். மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன்.