என்னவகையிலான விட்டுக் கொடுப்புகளையாவது செய்து இனமுரண் நிலைக்கான தீர்வினை எய்துவதற்காக உழைத்த தலைவர்

ஈரோஸ் ஜனநாயக முன்னணி

பௌத்த சிங்கள இனவாத அரசுகள் தொடர்ந்தும் தமிழ்பேசும் குமுகாயங்களின் சிக்கல்களுக்குத் தீர்வினை வழங்க முன்வராத நிலையில் “என்னவகையிலான விட்டுக் கொடுப்புகளையாவது செய்து இனமுரண் நிலைக்கான தீர்வினை எய்துவதற்காக உழைத்த தலைவராக” இரா.சம்பந்தன் அவர்களை ஈரோஸ் ஜனநாயக முன்னணி பார்க்கின்றது. என ஈரோஸ் ஜனநாயக முன்னணிவெயியிட்டுள்ளஅனுதாபஅஞ்சலி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவ்அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுநிலைத் தலைவராகவும் திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய இரா.சம்பந்தன் அவர்களது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருடனும் அவரது கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனும் ஈரோஸ் ஜனநாயக முன்னணியானது தனது துயரினைப் பகிர்கின்றது.

எமது மக்களது விடுதலைப் போராட்டமானது இன ரீதியான முனைப்புக் கொண்டபோது போராட்ட விடுதலை அமைப்புகளும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழகத்திலே தமது தளங்களை அமைத்துச் செயற்பட்டபோதிலிருந்து இரா. சம்பந்தன் அவர்கள் ஈரோஸ் அமைப்புடன் தொடர்புகளைப் பேணியவர்.

1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையின் பின்னர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலே ஈரோஸ் போட்டியிட்ட போது தமிழர் விடுதலைக் கூட்டணியில் இரா.சம்பந்தன் அவர்கள் திருக்கோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.
அத்தேர்தலின் போது அவர் ஈரோஸ் அமைப்புடன் நெருங்கிய உறவினை பேணியிருந்தார் என்பதனை இவ்விடத்தில் நினைவு கூருகின்றோம்.

பௌத்த சிங்கள இனவாத அரசுகள் தொடர்ந்தும் தமிழ்பேசும் குமுகாயங்களின் சிக்கல்களுக்குத் தீர்வினை வழங்க முன்வராத நிலையில் “என்னவகையிலான விட்டுக் கொடுப்புகளையாவது செய்து இனமுரண் நிலைக்கான தீர்வினை எய்துவதற்காக உழைத்த தலைவராக” இரா.சம்பந்தன் அவர்களை ஈரோஸ் ஜனநாயக முன்னணி பார்க்கின்றது.

ஈரோஸ் ஜனநாயக முன்னணியானது சிறிலங்காவின் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட பின்னர், இரா.சம்பந்தன் அவர்களுடன் இந்நாட்டிலுள்ள இனமுரண் நிலைக்கான தீர்வுகள் குறித்து பேசுவதற்கான தயார்ப்படுத்தல்களை நாம் செய்துகொண்டிருந்த வேளையில் அவரது இழப்புச் செய்தி எம்மையும் கவலை கொள்ளச் செய்கின்றது.

1989 ஆம் ஆண்டுத் தேர்தலிலே ஈரோஸ் அமைப்பானது திருக்கோணமலை மாவட்டத்தில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது.
இரா.சம்பந்தன் அவர்கள் அத்தேர்தலில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லையெனினும் ஈரோசுடன் நெருங்கிய உறவைப் பேணிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2000 ஆண்டுகளின் பின்னர் தொடர்ச்சியாக திருக்கோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குச் சென்றதன் மூலமாக திருக்கோணமலை மாவட்ட மக்களின் ஆதரவையும் அன்பையும் பெற்றவராக இரா.சம்பந்தன் அவர்கள் விளங்கினார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்
சிறிலங்கா அரசின் கபடத்தனங்களை உலகிற்கு வெளிப்படுத்திய தலைவராக இரா.சம்பந்தன் விளங்குகின்றார்.

“மேம்பாடுகள் நமது மக்களது கையிலுள்ள அதிகாரத்தின் மூலமாகச் செய்யப்பட வேண்டுமேயொழிய சிறிலங்கா அரசு தருகின்ற சலுகைகள் மூலமாக இல்லை” என்ற கருத்தினடிப்படையில் பல தடவைகள் ஆட்சியில் பங்கேற்பதற்கான அழைப்புகளை நிராகரித்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தன்னிலை இழக்காத தலைவராக இரா.சம்பந்தன் அவர்களை ஈரோஸ் ஜனநாயக முன்னணி பார்க்கின்றது.

அவரது மறைவின் மூலமாக துயருற்றிருக்கின்ற அவரது உறவினர்கள், அவரது கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் நாமும் எமது துயரினை மீண்டும் பகிர்கின்றோம்.

பொதுச் செயலர்,
ஈரோஸ் ஜனநாயக முன்னணி.