ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலையில் “திருக்கோணேஸ்வர ஆலயத்தின் புனிதத்தினை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் ஆலய பரிபாலன சபை, தொண்டர்கள் மற்றும் சைவ அடியார்களினால் பிரட்ரிக் கோட்டை வீதியில் உள்ள திருக்கோணேஸ்வர ஆலய அலுவலகத்தின் முன்பாக இன்று (01) காலை அமைதிப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணியின் பின்னர் கிழக்கு மாகாண ஆளுநரிடம் வழங்குவதற்காக மகஜர் ஒன்றும் ஆலய நிர்வாகத்தினரால் கையளிக்கப்பட்டது.
ஆலய எல்லைப் பகுதிக்குள் ஆலயத்திற்கு செல்லும் வீதியின் இரு பக்கங்களிலும் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கடை ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) கசிப்பு விற்பனை செய்த ஒருவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தார்கள் . இந்நிலையிலேயே ஆலயத்தின் புனிதத்தை பாதுகாக்க கோரி அமைதியான கவனயீர்ப்பில் இன்றையதினம் சைவ அடியார்க ஈடுபட்டிருந்தார்கள்.
அத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு யூன் மாதம் 10ஆம் திகதி திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குறித்த கடைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான முடிவு எட்டப்பட்டிருந்ததாகவும், மேலும் 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரியின் விஜயத்தின்போது குறித்த கடைத் தொகுதியை மாற்று இடத்தில் அமைப்பது தொடர்பாக கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடியபோது இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும் இதுவரை அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவற்றை நடைமறைப்படுத்துமாறும் ஆலய நிர்வாகத்தினர் குறித்த மகஜரில் கோரிக்கை விடுத்துள்ளனர்