வரியை அதிகரிப்பதே எல்லாவற்றுக்கும் தீர்வாக அமையாது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஒரு நாடாக நாம் பல பாரதூரமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறோம். எல்லாப் பக்கங்களிலிருந்தும் பல்வேறு வகையான பொருளாதார மரணப் பொறிகளில் சிக்கித் தவித்து வருகிறோம். வரிகளை அதிகரிப்பதே இவ்வாறான நிலைமைகளுக்கும் போக்குகளுக்குமான அரசாங்கத்தின் தீர்வுகளாக அமைந்துள்ளன. எந்தவொரு பிரச்சினைக்கும் அரசாங்கத்தின் தீர்வு வரிகளை அதிகரிப்பதாகவே அமைந்து காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட இணக்கப்பாடுகளின் பிரகாரம், 2028 ஆம் ஆண்டு முதல் நாம் மீண்டும் கடனை செலுத்த வேண்டும். 2033 ஆம் ஆண்டு முதல் செலுத்த முடியுமாக இருந்த கடனை 2028 ஆம் ஆண்டிலிருந்தே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது  அரசாங்கத்தின் இயலாமையினாலாகும். இவ்வாறான பலவீனமான இணக்கப்பாட்டையே எதிர்கொண்டுள்ளோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வருங்காலக் கடன்களைச் செலுத்துவதற்கான அரசாங்கத்தின் பதில் வரிகளை அதிகரித்து பொதுமக்களின் பணத்தை பிக்பொக்கட் அடைப்பதாகவே உள்ளது. நாட்டின் பிரச்சினைகளை இவ்வாறு தீர்க்க முடியாது. நாட்டில் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கவும், நாட்டின் பொருளாதார இயங்கிகளான நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினரை ஊக்கப்படுத்தவும், அவர்களின் தொழில்களை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும். பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் வகையில் அவர்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய மூலதனம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் பொருளாதார வளர்ச்சி நிலை ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு, பண வருமானம் கிடைத்து சுருங்கிப்போயுள்ள  பொருளாதாரம் விரிவடையும். இந்த நேரத்தில் பொருளாதார விரிவாக்கத்தைத் தவிர வேறு தீர்வு நாட்டில் இல்லையென்றாலும், வரிக்கு மேல் வரியை மக்களின் தோள்களில் சுமத்தும் சூத்திரத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் அரசாங்கத்தில் 10 இலட்சம் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்க விசேட ஜனாதிபதி செயலணியை ஸ்தாபிப்போம். ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சிக்காக, சமூகத்தின் அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைக்கப்பட்டு, ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிப்போம். தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியை விரைவுபடுத்தும் வகையில் தேசிய வேலைத்திட்டமொன்று முன்னெடுப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பழமைவாத முறைகளுக்கு அப்பால் சென்று, விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளை ஸ்மார்ட் தொழிற்துறையாக மாற்றியமைப்போம். இவ்வாறு செயல்பட்டால் உரிய காலக்கேட்டில் கடனை செலுத்த முடியும். இதனை விடுத்து வேறு வழியில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 271 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான  ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கம்பஹா, அத்தனகல்ல,  நிட்டம்புவ கித்தம்மஹர மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 29 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, பாடசாலை நடனக் குழுவிற்கு ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்கு சக்கர நாற்காலியும் வழங்கி வைக்கப்பட்டது.

🟩 ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கடன் செலுத்தும் காலம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், கடன் செலுத்தும் காலத்தை 2028 முதல் 2033 வரை கால நீடிப்பை பெற பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம்.

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்நாட்டின் தேசிய நிகழ்ச்சி நிரல் குறித்த புரிதலை கொண்டிருக்க வேண்டும். சமூகமே பயன்பெரும், அனைவருக்கும் பயன் தரும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். வரிகளை அதிகரிப்பது இதற்கான தீர்வாகாது.

🟩 எனது வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடும் பணத்தில் திறன் வகுப்பறைகளை வழங்குவது பெறுமதியானது.

வங்குரோத்தான நாட்டில், மக்களின் வாழ்வு நிலை குலைந்து கிடக்கும் இவ்வேளையில், சிலருக்கு நாம் பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களை முன்னெடுத்து வருவதில் பெரும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வெளிப்படைத்தன்மை காரணமாக, தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எமக்கு உதவி நல்கி வருகின்றனர். வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளுமாறு எனக்கு பலர் அழைப்பு விடுக்கின்றனர். வெளிநாட்டு பயணங்களுக்கு பயன்படுத்தும் அந்த பணத்தை நாட்டில் கல்வித்துறையை கட்டியெழுப்பும் பயணத்திற்கு பயன்படுத்துமாறு தான் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.