(வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மடு வீதியிலிருந்து மடு ஆலயத்துக்கான வீதி மற்றும் வீதியின் இரு பக்கங்களும் மக்களின் நலன்கருதி சிறந்த முறையில் புனரமைக்கப்பட்டுள்ளதால் வாகன வேகத்தினால் வீதி விபத்துக்கள் ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மடு ஆலய வீதியின் இரு பக்கங்களும் செடிக் காடுகளாக காணப்பட்டமையால் அவற்றை துப்பரவு செய்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு வனவள இலாகாவினால் இடையூறுகள் விளைவிக்கப்பட்டன.
இதனால் துப்பரவு செய்யப்படாமையால் போக்குவரத்துக்கு யானைகளால் மிகவும் அச்சநிலை காணப்பட்டதுடன் வாகன வேகங்களும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே காணப்பட்டும் வந்தது.
மன்னாருக்கு ஜனாதிபதி வருகை தந்திருந்த பொழுது இவ்வீதியின் இரு பகுதிகளையும் உடனடியாக துப்பரவு செய்து கொடுக்கும்படி இராணுவத்துக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்பொழுது இவ்வீதி சிறந்த முறையில் புனரமைக்க்பட்டு சிறந்த முறையில் காட்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையை பயன்படுத்தி வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மிக வேகமாக செலுத்தும் நிலை உருவாகியுள்ளதால் இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று மடு விழா சம்பந்தமான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையிட்டு தற்பொழுது இவ்வீதியில் போக்குவரத்து வேக சமிஞ்சைகள் இடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதனால் விழாக் காலங்களில் பொலிசாரும் இதில் கவனம் செலுத்தி விபத்துக்கள் நிகழாதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.