ஸ்மாட் கிராம அபிவிருத்தி என்ற கருத்திட்டத்தின் கீழ் புல்மோட்டை பட்டிக்குடா கிராமத்தில் சிரமதான இயக்கம் ஆரம்பம்.

(ஹஸ்பர் ஏ.எச்)   திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ” ஸ்மார்ட் கிராம” அபிவிருத்தி என்ற தொடர் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பசுமையான, சுத்தமான கிராமம் என்ற கருப்பொருளின் கீழ் சிரமதான இயக்கம்  (26) ஆரம்பிக்கப்பட்டது. பட்டிக்குடா பிரதான வீதியின் இரு மருங்கிலும் வீசப்பட்டிருந்த கழிவுகள் குப்பைகளை துப்பரவு செய்த சிரமதான செயற்பாடு  கிராம மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
பசுமையான, சுத்தமான, நோயற்ற கிராமம் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிரமதான இயக்கமானது. முழு புல்மொட்டை கிராமத்திற்கும் பரந்து முன்னெடுக்கப்படுவதற்கான ஒரு சிறு பொறியாகும். இந்த முயற்சியினை தொடர்ச்சியாக விடாப்பிடியாக முன்னெடுத்துச் செல்ல அனைவரும் உறுதி கொள்ள வேண்டும் என்று அழைப்பு இங்கு விடுக்கப்பட்டது. இதற்கான சகல ஒத்துழைப்புகளையும் பிரதேச சபையின் சார்பில் வழங்குவதாக அதன் செயலாளர் உறுதி அளித்துள்ளார். தவிர சுகாதார அதிகாரி தனது மற்றும் அலுவலக ஊழியர்களின் பங்களிப்பினைப் பெற்றுது தருவதுடன் பெண்கள், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
சிரமதான இயக்கத்தின் அடுத்த நிகழ்வுகளாக மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், சுத்தம் பேணுவோம் குப்பைகளை வீசாதிருப்போம் என்ற அறிவிப்புப் பலகையும் நடப்பட்டது.
குறித்த  நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி, வருமான பரிசோதகர், பட்டிக்குடா கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள். முஸ்லிம் எய்ட் திருமலை மாவட்ட இணைப்பாளர், திட்ட இணைப்பாளர்கள் மற்றும் கிராமத்தின் மூத்த மற்றும் இளம் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.