எதிரிகளை ஒன்றுபட்ட மக்கள் குரலால் விரட்டியடிக்க ஐந்து கிராமங்கள் ஒரு குடையின் கீழ்.

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குழுவினர் அடாத்தாக காணிகளை கைப்பற்றி வெளிநாட்டு கம்பனிகளுக்கு விற்பனை செய்யும் நோக்குடன் செயற்படுவதால் பாதிப்படையும் மக்கள் மன்னார் பிரஜைகள் குழுவை நாடி விமோசனத்தை வேண்டி நிற்கின்றனர்.

மன்னார் தீவில் மன்னார் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் காற்றாலை மற்றும் கனயவள மணல் அகழ்வில் ஈடுபட முயலும் வெளிநாட்டு கம்பனிகளுக்கு காணிகள் வழங்கும் நோக்குடன் ஒரு குழுவினர் பொது மக்களின் தனியார் காணிகளை அடாத்தாக பிடித்து வெளிநாட்டு இந்த கம்பனிகளுக்கு விற்பனை செய்வதில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக பாதிப்படையும் மக்கள் பொலிசாரிடம் முறையீடு செய்தாலும் நீதி கிடைப்பதில்லை எனவும் தெரிவித்துள்ள நிலையில் சுமார் 39 வருடங்களாக மக்களுக்காக குரல் கொடுத்து வரும் பிரஜைகள் குழுவின் உதவியை நாடி வருகின்றனர்.

இந்த வகையில் துள்ளுக்குடியிருப்பு கிராம அலுவலகர் பிரிவு கவ்வயன்குடியிருப்பு பகுதியில் ‘மாஸ் மிடல் அன்ட் மினரல் பிரைவட் லிமிடட்’ எனும் நிறுவனத்தால் 160 ஏக்கர் வரையிலான காணியை சுற்றி முட்கம்பியினால் அடைக்கப்பட்டு காடுகள் மற்றும் பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன எனவும்

இதனால் பனை மரங்களையே நம்பி வாழும் இப்பகுதி மக்கள் தங்கள் காணிகள் அபகரிக்கப்படுவதையும் பனை மரங்கள் அழிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி தங்களுக்கு இதிலிருந்து விமோசனம் கிடைக்க மன்னார் பிரஜைகள் குழுவை நாடியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இப்பகுதியிலுள்ள கவ்வயன்குடியிருப்பு . துள்ளுக்குடியிருப்பு , பாவிலுப்பட்டான் குடியிருப்பு , நடுக்குடா மற்றும் கீழியன்குடியிருப்பு ஆகிய ஐந்து கிராமங்களும் ஒன்றிணைந்து பிரஜைகள் குழுவின் ஆதரவுடன்  ‘நமது குழந்தைகளுக்காக’ என்ற அமைப்பை உருவாக்கி ஒன்றுபட்ட மக்கள் குரலாக செயல்பட்டு எதிரிகளை விரட்டுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கான கருத்தமர்வு ஞாயிற்றுக்கிழமை (23) கவ்வயன்குடியிருப்பில் ஐந்து கிராம மக்களின் பிரதிநிதிகளுக்கும் பிரஜைகள் குழுவின் ஆளுநர் சபைக்கும் இடையில் இடம்பெற்றது.