மீள்குடியேறிய மக்களின் காணிகள் கைநழுவியதால் வாழ்வாதாராம் அற்ற நிலை. நல்லிணக்க குழுவிடம் அரசு அதிபர் சுட்டிக்காட்டு.

( வாஸ் கூஞ்ஞ) மன்னாரில் பொது மக்களின் விவசாய காணிகள் வனவள இலாகாவினால் கையடக்கப்பட்டுள்ளதால் மீள்குடியேறியுள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு கஷ்டப்படுகின்றனர் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தேசிய நல்லிணக்கம் , ஒற்றுமை மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் நோக்கில் மன்னாருக்கு வருகை தந்திருந்த குழுவிடம் சுட்டிக்காட்டினார்.

தேசிய நல்லிணக்கம் , ஒற்றுமை மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் மன்னாருக்கு செவ்வாய் கிழமை (25) விஜயத்தை மேற்கொண்ட குழுவினர் அரசாங்க அதிபர் ,  மேலதிக அரசாங்க அதிபர் (காணி) , திட்டமிடல் பணிப்பாளர் , ராணுவ பொறுப்பதிகாரிகள் , மேன்மட்ட உயர் அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள் உட்பட மாவட்டச் செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களுடான கலந்துரையாடலின் போதே அரசாங்க அதிபர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இங்கு மேலும் தெரிவிக்கையில்

இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேறிய பின்பு தங்கள் விவசாய நிலங்களை மீளத்தருமாறு கோரி நிற்கின்றனர்.

அந்த வகையில் குறிப்பிட்ட விவசாய நிலங்கள் வனவள , வனஜீவராசி இலாகா பகுதினர் தங்கள் வசம் கையடக்கப்படுத்தியுள்ளனர்.

இதனால் இவர்கள் கோரும் தங்கள் காணிகளை மீளப்பெற்று உரிமையாளர்களுக்கு வழங்க முடியாத நிலையும் இங்கு காணப்படுகின்றது.

-இதன் காரணமாக இவர்களின் வாழ்வாதாரத்துக்கு பெரும் சவாலை எதிர்நோக்கும் நிலையும் காணப்படுகின்றது.

யுத்தக் காலத்தில் மக்க்ள் இடம்பெயர்ந்த காரணத்தினால் வனவள இலாகாவினால் கைப்பற்றப்பட்ட பொது மக்களின் காணிகள் காடுகளாகவும் மாறியுள்ளது.

மக்களின் தகவல்களின் படி சுமார் 12 ஆயிரம் ஹெக்டர் நிலத்துக்கான விபரங்களை வனவள இலாகாவிடம் சமர்பித்தும் 1500 ஹெக்டர் நிலமே மீட்கக்கூடியதாக இருந்தது.

இதனால் இந்த விடயத்தில்  பொது மக்களின் கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கின்றோம். என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு அவர்களிடம் சுட்டிக்காட்டினார்.

இதற்கு இக்குழுவினர் பதிலளிக்கையில்
இந்த பிரச்சனை மன்னார் மாவட்டத்துக்கு மட்டுமல்ல அனுராதபுரம் . புத்தளம் . பொலநறுவை போன்ற பல்வேறு மாவட்டங்களிலும் இந்நிலை காணப்படுகின்றது.

உண்மையில் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் வனவள இலாகாப் பகுதினரால் வர்த்தமானி அறிவித்தல்களினால் பெறப்பட்ட இவ்விடங்களi மீண்டும் விடுவிப்பதென்றால் மீண்டும் வர்த்மானி அறிவித்தல் மூலமே பெற வேண்டும்.

இது சாதாரணமாக செய்யக்கூடிய ஒரு வேலையுமல்ல. இது ஒரு கொள்கை அடிப்படையில் செய்ய வேண்டியது ஒன்றாகவும் இருக்கின்றது.

இது நாங்கள் விஜயம் செய்த அனைத்து மாவட்டங்களிலும் பொதுவான பிரச்சனையாக இருக்கின்றது.

இது தொடர்பாக நோக்கும்போது ஏற்கனவே மக்கள் அரச காணிகளையே பயன்படுத்தி வந்துள்ளனர். இங்கு தனியார் காணிகளை அபகரிக்கப்படவில்லை என நம்புகின்றேன்.

ஆகவே அரசாங்கம் ஒரு பொதுவான கொள்கைகளை வகுத்து செயல்பட வேண்டும் என இந்த ஆணைக்குழு சிபாரிசு செய்ய இருப்பதாகவும் இதற்கான நல்ல தீர்வு ஒன்று எட்டும் என்றும் நம்புகின்றோம்.

வனவள இலாகா வன ஜீவராசி திணைக்களங்களால் இந்த வேலைகளை தனித்து செய்ய முடியாது. இது தொடர்பாக அமைச்சரவை பத்திரம் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற பின்பே இதற்கான நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.