கொழும்பில்,தமிழ் புத்தக கண்காட்சி.

இலங்கை தமிழ்மொழிச் சூழலில், வாசிப்பினை ஊக்கப்படுத்துவதற்காகவும், புத்தகப் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும், நீண்டகால செயற்திட்டத்தின் தொடக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. , பாடசாலை மாணவர்களையும் இளம் தலைமுறையையும் முதன்மை பிரிவினராகக் கொண்ட ’வாசிப்பு, எழுத்து, புத்தக பரவலாக்க தொண்டுச் செயற்பாட்டை’ தொடங்கி வைக்கும் வகையில் , எதிர்வரும் 21,22,23ம் திகதிகளில் வெள்ளவத்தை சைவ மகளிர் மண்டபத்தில் மூன்று தினங்கள் இந்த நிகழ்வு இடம் பெறவுள்ளதாக இந்த செயற்திட்டத்தின் சர்வதேச இணைப்பாளர் எம். பௌசர் தெரிவிக்கிறார்.

இந்த முக்கிய நிகழ்வில், புத்தக கண்காட்சியும், ஆய்வரங்கும் இடம்பெற இருக்கிறது.புத்தக கண்காட்சி, 21ம் திகதி வெள்ளி மாலை தொடங்கி, 23ம் திகதி ஞாயிறு இரவு வரை இடம்பெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் தமிழகப் பதிப்பகங்களான பாரதி புத்தகாலயம், நியூசெஞ்சரி புக் ஹவ்ஸ், காலச்சுவடு, டிஸ்கவரி, எதிர், நன்னூல், சிக் சென்த் பதிப்பகங்கள் உட்பட, தஞ்ஞாவூர் பல்கலைக்கழகமும் , லண்டன் சமூகம் இயல் பதிப்பகமும் கலந்து கொள்கிறது. இலங்கையிலுள்ள முன்னணிப் பதிப்பகங்களும் , புத்தக நிலையங்களின் விற்பனைக் கூடங்களும் இடம்பெறவுள்ளதுடன், தமிழ், ஆங்கில சிறுவர் பதிப்பகங்களும் கலந்து கொள்ளவுள்ளன.புத்தக கண்காட்சி அரங்குக்கு மலையக மாணவ சமுதாயத்தினை உருவாக்க பங்களித்த வி.ரி. தர்மலிங்கத்தின் பெயர் வக்கப்பட்டுள்ளது.

 ஈழத்து தமிழ்மொழி எழுத்தாளர்களுக்கான தனி அரங்கும் விசேடமாக அமைக்கப்படவுள்ளது. இந்திய நூல்களை குறைந்த  நாணைய மாற்று விலையில் இங்கு பெற்றுக் கொள்ள முடியும். இந்த வாய்ப்பினை இலங்கை மாணவர்கள், எழுத்தாளர்கள்,  வாசிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.பாடசாலை, பல்கலைக்கழக நூலகங்கள் தொடக்கம், உள்ளுராட்சி நூலகங்கள் தமக்கான நூல்களை பெற்றுக் கொள்ளவும் இந்த நிகழ்வு  ஒரு அரிய வாய்ப்பாகும்.

ஆய்வரங்கு நிகழ்வில், தமிழகத்தில் இருந்து பேச்சாளர், கதைசொல்லி பவா செல்லத்துரை, எழுத்தாளர் பெருமாள்  முருகன், கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஸ்ணா, உலகறிந்த தமிழாய்வாளர் முனைவர் இரா வேங்கடாசலபதி, பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் உட்பட தமிழகத்தில் இருந்து பலர் வருகைதர உள்ளனர். இலங்கை பல்கலைக்கழகக்ங்களைச் சேர்ந்த மூத்த கல்வியலாளர்களுடன், இளம் பல்கலைக்கழக ஆசிரியர்களும், ஆய்வாளர்களும், எழுத்தாளர்களும் தமது ஆய்வுகளையும் கருத்துக்களையும் முன்வைக்க உள்ளனர். பங்குபற்றுனர்களுடனான விரிவான கலந்துரையாடலும் இடம்பெற உள்ளது.

பாடசாலை மாணவர்கள்  மத்தியிலும் இளம் தலைமுறையினரிடையேயும்  வாசிக்கும் உள ஆர்வச் செயற்பாட்டினை அடித்தளமாகக் கொண்ட இந்த முக்கிய செயற்திட்டத்திற்கு, பாடசாலை ஆசிரியர்களும் , பாடசாலை நிர்வாகங்களும் பெற்றோர்களும்  எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் அதிகம் பங்களிக்க வேண்டி உள்ளது. இந்த திட்டத்தினை தொடங்கி வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வுக்கு பேராசிரியர் சி. மௌனகுரு தலமை வகிக்க உள்ளார். இதில்  மறைந்த ஓவியர் அ. இராசையாவின் அரும்பெரும் நூல் உட்பட, பல நூல்களை இலங்கையின் பல பகுதிகளிலுமுள்ள நூறுக்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்படவுள்ளது.

மற்றுமொரு நிகழ்வாக, கவிஞர் மறைந்த மஹாகவி அரங்கில், லண்டனில் உள்ள சமூக இயல் பதிப்பக வெளியீடுகளான  பேராசிரியரும் எழுத்தாளருமான எம், ஏ. நுஃமானின் இரு நூல்கள் வெளியீட்டு வைக்கப்படவுள்ளன. இந்த நூல்கள் குறித்து பேராதனை பல்கலைக்கழக ஆசிரியர் சுதர்சன் செல்லத்துரை, இராஜதந்திரி அலியார் அசீஸ்,பேராசிரியர்களான  சி. சிவசேகரம், சித்திலேகா ஆகியோர் உரையாற்றவுள்ளனர். மறைந்த பேராசிரியர் சு.வித்தியானந்தன், மறைந்த அறிஞர் ஏ,எம்,ஏ, அசீஸ் ஆகியோரின் அரங்குகளும் உள்ளன. இந்த திட்டத்தினை  இங்கிலாந்தில் உள்ள மானுடம் அமைப்பு  இலங்கையிலுள்ள மதகு அமைப்புடன் இணைந்து முன்னெடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.