பிரபஞ்சம் திட்டத்திற்காக யாழ் வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்.

யாழ்.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று இன்று(10) யாழ்.மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் குறித்த இளைஞர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்காக அவ்விடத்திற்கு பிரசன்னமானார். பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் பஸ் வழங்கும் வேலைத்திட்டங்களுக்காக இந்நாட்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள வேளையிலயே இச்சந்திப்பும் இடம்பெற்றது.

வட மாகாணத்தில் கிட்டத்தட்ட 4000 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். அத்துடன் குறித்த பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில் செய்வதற்கு சலுகை அடிப்படையிலான கடன் வசதியை செய்து தருமாறு அவர்கள் இதன்போது எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் பஸ் வழங்குவதற்காக தான் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள வேளையில், இந்த போராட்டத்தை கண்டு தற்செயலாக வாகனத்தை நிறுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார். தான் அரசியல் ரீதியாக நலவுகளை ஈட்டிக்கொள்ள இங்கு சமூகம் தரவில்லை என்றபடியால், இவர்களது பிரச்சினைகள் அனைத்தும் அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசின் பதில்களை பெற முயற்சிகளை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும், இந்நாட்டில் சுமார் 50,000 முதல் 60,000 பட்டதாரிகள் உள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இவர்களுக்காக மேற்கொள்ள முடியுமான தெளிவான மற்றும் முறையான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். அவர்களுக்கு அரச வேலைவாய்ப்பு அல்லது தொழில் முயற்சியாண்மையை தெரிவு  செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம். ஒரு மில்லியன் புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தி அரசின் முக்கிய நோக்கமாகும்.

அவ்வாறே, மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கும் எந்தவித பாரபட்சமும் இன்றி கிராமத்துக்கும் நாட்டுக்கும் சேவையாற்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம். அவர்களின் திறமைக்கும் அவர்களின் அறிவுக்கும் உரிய இடம் வழங்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

மற்றும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் பர்கர்கள் போன்ற விடயங்களையும்,  மதம், இனம், சாதி என்ற பார்வையையும்  ஒதுக்கி வைத்துவிட்டு, வங்குரோத்தான நாட்டை கட்டியெழுப்ப ஒரே தாயின் பிள்ளைகள் போல் கைகோர்க்குமாறும், இதற்கான தலைமைத்துவத்தை தாம் வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியதாவது: பட்டதாரிகள் பலர் வேலை கிடைக்காமல் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இந்த மூளைசாலிகள் வெளியேற்றத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும், அவ்வாறு நிறுத்தும் போது அவர்களின் பங்களிப்பை நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.