(வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படும். மீண்டும் அது ஜூலை 11 ஆம் திகதி மூடப்படும் .
முன்னர் இப் பாதை திறக்கப்படும் திகதி யூலை 1 ஆம் திகதி என மொனராகலையில் தீர்மானிக்கப்பட்டிருந்ததது. பின்னர் லாகுகல பிரதேச செயலகத்தினால் அது ஜுலை 2 ஆம் தேதி என கூட்டத்தில் கூறப்பட்டது.
இதனை காரைதீவு முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உதவிக் கல்விப் பணிப்பாளர் விரி.சகாதேவராஜா ஆகியோர் சபையில் எழுந்து இக்காலம் அறவே போதாது .அது ஒரிருநாள் முந்தி மாற்றப்படவேண்டும்.யாத்திரீகர்களின் நலன்கள் கட்டாயம் பேணப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பலனாக அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர்களும் அந்த இடத்தில் கலந்துரையாடி இத் தேதி இம் மாதம் 30 ஆம் திகதியாக மாற்றப்பட்டது.
கடந்த (7) வெள்ளிக்கிழமை உகந்த மலை முருகன் ஆலயத்தின் காரைதீவு மடத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தலைமையில்
இடம் பெற்ற கூட்டத்தில் மேற்படி இறுதி முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதிய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் , பிரதேச செயலாளர்கள், படை அதிகாரிகள், மதப் பெரியார்கள், திணைக்களத் தலைவர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பாதயாத்திரையின் போது அன்னதானம் நீராகாரம் பிளாஸ்டிக் போத்தல்களில் நீர் வழங்கல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது என லாகுகல பிரதேச செயலகம் அங்கு அறிவித்தது.
அதனை பரிசீலனைக்குட்படுத்தி சுகாதார துறை வனஜீவராசிகள் திணைக்கள அனுமதியோடு இதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என காரைதீவு முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உதவிக் கல்விப் பணிப்பாளர் விரி.சகாதேவராஜா வேண்டுகோள் விடுத்தனர்.
அதனை அரச அதிபர் சிந்தக அபேவிக்ரம மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் ஆகியோர் ஏற்றுக்கொண்டு அதன்படி செய்வோம் என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் போக்குவரத்து நீர் வழங்கல் மின்சாரம் பாதுகாப்பு பற்றி கலந்துரையாடப்பட்டது.
கூட்டத்தில் 90 வீதமானோர் தமிழ் அதிகாரிகள் பிரதிநிதிகள் மக்கள் கலந்து கொண்ட போதிலும் அங்கு விநியோகிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் தனிச் சிங்களத்தில் அமைந்திருந்தது விசனத்தை ஏற்படுத்தியது. மேலும் கூட்டமும் சிங்களத்தில் பெரும்பாலும் நடைபெற்றது. தமிழ் மொழி பெயர்ப்பு இடம் பெறவில்லை. இதனால் பலரும் அசௌகரியமடைந்தனர். அங்கு லாகுகல பிரதேச செயலகத்தினால் காண்பிக்கப்பட்ட காணொளியில் கணக்கு வழக்கில் சில தவறுகள் காணப்பட்டன. அதனை முன்னரே செவ்வை பார்க்கப் பட்டிருக்க வேண்டும் . பெருங் கூட்டத்தில் அக் கணக்கறிக்கை செம்மையாக வெளியிடப்பட வேண்டும் என்று பங்குபற்றுனர்கள் கருத்து தெரிவித்தனர்.
உகந்தை மற்றும் கதிர்காமம் முருகனா லயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா
உற்சவம் ஜுலை 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை மாதம் 22 திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.