வடக்கு, கிழக்கு மாகாண மக்களும் பல்வேறு வாய்ச் சொல் தலைவர்களின் சீனி உருண்டை அரசியலுக்கு அடிமைப்பட்டு, தேர்தல் காலங்களில் அவர்கள் தரும் கனவு உலகத்தில் தொலைந்து போகின்றனர். இந்த சீனி உருண்டை அரசியலால் ஏமாற்றப்படும் காலம் முடிவுக்கு வர வேண்டும். இப்பிரதேச மக்களின் அரசியல், சிவில் உரிமைகள் மட்டுமன்றி, பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் சிறந்த வருமானத்தைப் பெறுவதற்கான உரிமைகளை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 226 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 09 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
பேச்சுக்களுக்கு செயல்வடிவம் கொடுக்க காலம் சரி.
யாழ்ப்பாண மக்கள் பல்வேறு தலைவர்களின் கதைகளை போதுமான அளவு கேட்டுள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி, மன்னார், முல்லைத்தீவு மக்கள் அந்தக் கதைகளைக் கேட்டு அலுத்துப் போயிருக்கிறார்கள். இந்தப் பேச்சுக்களுக்கு செயல்வடிவம் கொடுக்குமாறு மக்கள் கேட்கின்றனர். இந்த நடவடிக்கையாக, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கை அறிவின் மையங்களாக மாற்றுவோம்!
யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட வட மாகாணத்தின் சகல மாவட்டமும் அறிவின் மையங்களாக மாற்றப்படும். பாடசாலை மட்டத்தில் தகவல் தொழில்நுட்பக் கல்வி, ஆங்கில மொழி அறிவை மேம்படுத்துவோம். மேலும், அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் கல்வி உரிமை உள்ளடக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் அரக்கனிடம் இருந்து பிள்ளைகளைக் காப்பாற்றுவோம்.
பிள்ளைகளை போதைப்பொருள் அரக்கனின் வலையில் இரையாக்கிக் கொள்ள பல்வேறு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போதைப்பொருட்களை சமூகத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த போதைப் பொருட்களால் அழியும் பிள்ளைகளைக் காக்க, போதைப்பொருளை சமூகத்திலிருந்து ஒழிக்கும் கொள்கையில் ஐக்கிய மக்கள் சக்தி இருந்து வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அதிகாரம் இல்லாமல் யாழ்பாணத்திற்கு பணியாற்றியவர்கள் நாங்களே!
கடந்த கால ஆட்சியாளர்கள் அரச அதிகாரத்துடனும், அரச நிதி ஒதுக்கீடுகளின் மூலமே யாழ்ப்பாணத்துக்கு பணிபுரிந்துள்ளனர். அதிகாரம் இல்லாமல் ஐக்கிய மக்கள் சக்தியே யாழ்ப்பாணத்திற்கு பெறுமதி சேர்த்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக, நாடு முழுவதையும் உள்ளடக்கிய பங்களிப்பை நல்கியுள்ளது. இது மக்கள் எதிர்பார்த்த முறைமையில் மாற்றமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆட்சியாளர்கள் ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்புவதாகச் சொல்கிறார்கள், ஆனால் அதை எவ்வாறு செய்வது என்று கூட தெரியவில்லை.
ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்புவதாக ஆட்சியாளர்கள் கூறினாலும், அதனை எவ்வாறு முன்னெடுப்பது என்று அரசாங்கம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இது தொடர்பான திட்டங்கள் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளன. ஏனைய அரசியல்வாதிகள் சிங்கள வாக்குகள் மற்றும் தமிழ் வாக்குகளைப் பெறுவது எவ்வாறு என சிந்தித்து செயல்பட்டுவரும் போது, நாட்டில் உள்ள 10099 பாடசாலைகளில் பயிலும் சுமார் 41 இலட்சம் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து நான் சிந்தித்து செயற்பட்டு வருகின்றேன். இதன் பிரதிபலனாகவே இந்த பிரபஞ்சம் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.